7 சதவீத உச்சவரம்பை நீக்கும் கிரீன் கார்டு மசோதா நிறைவேறியது: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
7 சதவீத உச்சவரம்பை நீக்கும் கிரீன் கார்டு மசோதா நிறைவேறியது: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க விதிக்கப்பட்ட உச்சவரம்பை நீக்கும் மசோதா, பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இது, அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.  இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக எச்1பி விசாவில் செல்கின்றனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப (ஐடி) ஊழியர்கள் போன்ற உயர்திறன் கொண்ட பணியாளர்கள், அங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கு, அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை  அட்டையான, ‘கிரீன் கார்டு’ பெற வேண்டும். ஆனால், தற்போதைய அமெரிக்க சட்டத்தின்படி, பிறநாட்டை சேர்ந்தவர்கள் 7 சதவீதம் பேர் மட்டும் கிரீன்கார்டு பெற முடியும். இதனால், பல ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் கிரீன் கார்டு பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீத கிரீன் கார்டு மட்டுமே வழங்கப்படும் என்ற உச்சவரம்பை நீக்குவதற்கான `உயர்திறன் கொண்ட குடியேற்றவாசிகள் சட்டம் 2019’ என்ற மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 435 உறுப்பினர்களில் 365 பேர் ஆதரவாகவும், 65 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், கிரீன்கார்டு பெறுவதற்கான சதவீத உச்சவரம்பு நீக்கப்பட்டு,  குடும்பம் சார்ந்த முறை செயல்படுத்தப்படும். இதன் மூலம், குடும்பம் அடிப்படையிலான கிரீன்கார்டு பெறுவதற்கான உச்சவரம்பு 15 சதவீதமாக உயரும்.இந்த மசோதா செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டால், பல ஆண்டுகளாக கிரீன் கார்டு பெற காத்திருக்கும் இந்தியர்கள் அதிகளவில் பலன் அடைவார்கள். ஆனால், செனட்டில் உள்ள ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களில் பலர், இந்த மசோதாவுக்கு எதிராக உள்ளதாக கருதப்படுவதால், இதை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளதாக தெரிகிறது. பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கலிபோர்னியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு, வாஷிங்டனின் சியாட்டில், கிரேட்டர் வாஷிங்டன் பகுதிகளில் வாழும் இந்திய ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த மசோதாவை செனட்டிலும் விரைவில் நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

மூலக்கதை