இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூஸி.,

தினமலர்  தினமலர்
இறுதி போட்டியில் இங்கிலாந்து  நியூஸி.,

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. வரும் 14 ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதுகின்றன.


இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் 'வேகத்தில்' கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (4) ஒற்றை இலக்கில் திரும்பினார். பின், இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேரி ஜோடி பொறுப்புடன் விளையாட, அணி சரிவிலிருந்து மீண்டது. ரஷித் 'சுழலில்' கேரி (46), ஸ்டாய்னிஸ் (0) சிக்கினர்.


ஸ்மித் அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தார். போராடிய ஸ்மித் (85) ரன் அவுட்டானார். ஸ்டார்க் 29 ரன்களில் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ், ரஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து இறுதி போட்டியில் நியூஸிலாந்துடன் மோதும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

மூலக்கதை