எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது: கர்நாடக சபாநாயகர் மனு

தினகரன்  தினகரன்
எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்குமாறு தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது: கர்நாடக சபாநாயகர் மனு

புதுடெல்லி: எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனக்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது என கர்நாடக  சபாநாயகர் ரமேஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று காலை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக சபாநாயகர் மனு அளித்துள்ளார். தனது மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏ-க்கள் அனைவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால் கர்நாடக அரசியல் சூழலில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. மொத்தம் 16 எம்எல்ஏ-க்கள் இதுவரை ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். ஆனால் சபாநாயகர் அவர்களின் கடிதத்தை ஏற்க மறுத்துள்ளனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏ-க்களில் 10 பேர் சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தனர். ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என சபாநாயகர் ரமேஷ்குமார் மீது மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சபாநாயகர் வேண்டுமென்றே தாமதிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எம்எல்ஏக்கள் 10 பேரும் சாபநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பெங்களூரு செல்லும் எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுாப்பு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் கர்நாடக சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நாளை காலை உச்சநீதிமன்றத்தில் அறிக்கை  தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர் முறையீடு செய்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், எம்எல்ஏ-க்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என்றும், இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இன்றே விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

மூலக்கதை