சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

சென்னை: இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தை போற்றும் வகையில் அவரது 309வது பிறந்த நாளையும், 262வது நினைவு நாளையும் முன்னிட்டு சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைச்சர் ஜெயக்குமார், பாண்டியராஜன், பென்ஜமின் மற்றும் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். யாதவ எழுச்சி பேரவை சாாபில் முன்னாள் அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் மாநில தலைவர் ம. கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் யாதவ பேரவை தலைவர் ஜி. கண்ணன், அகில இந்திய யாதவ சபை தலைவர் ஏ. ராதாகிருஷ்ணன் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோகுல மக்கள் கட்சி சார்பில் மாநில தலைவர் எம். வி. சேகர் தலைமையில் நாகை தமிழ்மன்னன், சக்திபாலா, மோகன், கிருஷ்ணன், குணசேகரன், ஆலந்தூர் ராஜேந்திரன், சைதை ராஜேந்திரன், விஜயகுமார், ஜெகன்நாதன், வசந்த்ராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் எம். வி. சேகர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி முதல் கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயிலுக்கும், தூத்துக்குடி அல்லது திருச்சி விமான நிலையத்திற்கு அழகுமுத்துகோன் பெயரை வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது சிலையை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவி பிரதமர் மோடி திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அழகுமுத்துகோன் கை, கால்களை சங்கிலியால் கட்டி, பீரங்கி முன் நிறுத்தி குண்டுகளால் சுடப்பட்ட இடத்தில் இன்றைய இளைஞர்களுக்கு வரலாறும் நாட்டுப்பற்றும் தெரியும் வகையில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும். இன்று நீர் வளம் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் மேய்ச்சல் இடம் இல்லாமல் உள்ளது.

அதனால் யாதவ் மக்கள் முன்னேற்றத்திற்கு மானிய விலையில் ஆடு மாடுகளை வழங்கி, நலவாரியம் அமைத்து கொடுக்க வேண்டும். சென்னை மாநகர முன்னாள் மேயராக பணியாற்றி, சென்னை பட்டணத்தை தமிழகத்தில் சேர்க்க பாடுபட்ட முன்னாள் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளைக்கு மரியாதை செய்யும் வகையில் பிற சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செய்வது போலவே அரசு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை