எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்க 2 புதிய நீதிமன்றங்கள் சென்னையில் திறப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்க 2 புதிய நீதிமன்றங்கள் சென்னையில் திறப்பு

சென்னை: எம். பி, எம். எல். ஏக்கள் மீது பதிவான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னையில் புதியதாக 2 நீதிமன்றங்களை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி தொடங்கி வைத்தார். எம். பி, எம். எல். ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழ்நாட்டில் எம். பி, எம். எல். ஏக்கள் மீது பதிவாகியுள்ள குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலன் மாளிகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிமன்றத்திற்கு நீதிபதி சாந்தி நியமிக்கப்பட்டார்.

இதனைதொடர்ந்து சிறுமி பாலியல் வழக்கில் பெரம்பலூர் முன்னாள் எம். எல். ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, தேச துரோக வழக்கில் வைகோவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை என இந்த நீதிமன்றம் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழக்குகளையும் சென்னையில் உள்ள நீதிமன்றமே விசாரிக்க வேண்டியுள்ளதால், அதனை 6 மாதத்திற்குள் முடிக்க காலதாமதம் ஏற்படுவதாக கூறி, அந்தந்த மாவட்டங்களில் பதிவாகியுள்ள வழக்குகளை, அந்தந்த மாவட்ட நீதிபதிகள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்னையில் இருந்த, பிற மாவட்ட வழக்குகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட செசன்ஸ் நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டது.

மேலும், எம். பி, எம். எல். ஏக்கள் மீது சிபிஐ, சிபிசிஐடி, பெரா, போக்சோ சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க கூடுதலாக சென்னையில் 2 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை கலெக்டர் அலுவலகத்தில் 2 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம்-2, கூடுதல் சிறப்பு நீதிமன்றம் என இரண்டு நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி தொடங்கி வைத்தார்.

உடன் உயர்நீதிமன்ற நீதிபதி வினித்கோத்தாரி, சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிதாக தொடங்கப்பட்டுள்ள 2வது நீதிமன்றத்திற்கு, ஏற்கனவே முதல் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சாந்தி மாற்றப்பட்டுள்ளார்.

முதல் நீதிமன்றத்திற்கு காஞ்சிபுரத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த நீதிபதி கருணாநிதி புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தனை மாதங்களாக ஒரே நீதிபதி விசாரித்து வந்த வழக்குகளை, இனி இவர்கள் மூன்று பேரும் பிரித்து விசாரிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானி, சைதாப்பேட்டையில் புதிகாக கட்டப்பட்டுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற கட்டிடத்தையும், விரைவு நீதிமன்றத்தையும் தொடங்கிவைத்தார்.

.

மூலக்கதை