திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் குடிநீர் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் அருகே நரசிங்கபுரத்தில் குடிநீர் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக குடிநீரின்றி தவித்த நரசிங்கபுரம் கிராம மக்கள், 300க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் போர்வெல் அமைத்து, மேல்நிலை தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் மணல் கொள்ளை அதிகளவில் நடந்ததால் தற்போது நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து விட்டது.

இதனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தி மனு கொடுத்தனர். தொடர்ந்து, கடம்பத்தூர் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தும், முறையாக தண்ணீர் வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த நரசிங்கபுரம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர், இன்று காலை 6. 30 மணியளவில் பூந்தமல்லி-அரக்கோணம் நெடுஞ்சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தால்தான் மறியலை கைவிடுவோம்’ என கிராம மக்கள் கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் சீனிவாசன் விரைந்து வந்து, ‘உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து, மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால், அச்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.

மூலக்கதை