திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் புனரமைக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தது. கருட பகவான் ஆஞ்சநேயர் சன்னதிகளுடன் விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பகவத்ப்ராத்தனை, அக்னி பிரதிஷ்டை, மகாபூர்ணாஹூதி, முதல் கால ஹோமம், ஆராதனை நடந்தது.

நேற்று 2ம் கால மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தன. மாலை 4 மணியளவில் 3ம் கால மகா ஹோமம், யந்திரஸ்தாபனம், பிம்பவாஸ்து உட்பட பூஜைகள் நடந்தன.

இன்று அதிகாலை 5 மணியளவில் விஸ்வரூப தரிசனம், விசேஷ ஹோமம், மகா பூர்ணாஹூதி, கும்ப புறப்பாடு நடந்தது.

இதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு தொடங்கி 10. 30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள், கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியை காண திரண்டிருந்த மக்கள், பக்தி பரவசத்துடன், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். நிகழ்ச்சியில் கைங்கர்ய சபா சங்க உறுப்பினர்கள் ஏ. பிரகாசம், பூதூர் ரங்கநாதன், கமாண்டோ ஏ. பாஸ்கரன், பொன். பாண்டியன், பி. வி. எஸ். சண்முகம், எஸ். பி. பி. ராஜா, எஸ். குணசேகரன், டி. ஆர். எஸ். சந்துரு, வக்கீல் இ. ஜெகதீசன், மன்னார் மற்றும் 32 சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இன்று இரவு 7 மணியளவில் சேஷ வாகனத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் மற்றும் செயல் அலுவலர் நாராயணன் மற்றும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கைங்கர்ய சபா சங்கம் செய்திருந்தது.

.

மூலக்கதை