காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலைக்குள் சபாநாயகர் முன் ஆஜராக வேண்டும். அவர்கள் கொடுக்கும் ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மாநில சட்டபேரவைக்கு கடந்த 2018ல் நடந்த பொது தேர்தலில் பாஜ-104, காங்கிரஸ்-80, மஜத-37, பிஎஸ்பி-1 மற்றும் சுயேட்சைகள் 2 என்ற வகையில் வெற்றி பெற்றனர். இந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதை தொடர்ந்து மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருகட்சி தலைவர்களும் முடிவு செய்தனர். கடந்த 2018 மே 23ம் தேதி பெங்களூரு விதான்சவுதா வளாகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மேற்கு வங்க முதல்வர் மம்தாபேனர்ஜி உள்பட 9 மாநில முதல்வர்கள், 22க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் முதல்வராக எச். டி. குமாரசாமியும், துணைமுதல்வராக டாக்டர் ஜி. பரமேஷ்வரும் பதவியேற்றனர்.

முதல் கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு ஜூன் 5ம் தேதியும், 2வது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு டிசம்பர் 22ம் தேதியும், மூன்றாவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு கடந்த மாதம்14ம் தேதி நடந்தது. மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் அடிக்கடி குழப்பம் தலைதூக்கினாலும் தலைவர்கள் சமரசம் செய்து ஆட்சியை காப்பாற்றி வந்தனர்.

இந்நிலையில் பல்லாரி மாவட்டம், விஜயபுரா தொகுதி காங்கிரஸ் பேரவை உறுப்பினராக இருக்கும் ஆனந்த்சிங், அவரது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமாருக்கு கடந்த 1ம் தேதி அனுப்பினார்.

அதை தொடர்ந்து கடந்த 6ம் தேதி ராமலிங்கரெட்டி (பிடிஎம் லே அவுட்), ரமேஷ்ஜாரகிஹோளி (கோகாக்), பி. சி. பாட்டீல் (ஹிரகெரூரு), பிரதாப்கவுடா பாட்டீல் (மஸ்கி), மகேஷ்குமட்டஹள்ளி (அதானி), சிவராஜ் ஹெப்பார் (எல்லாபுரா), எஸ். டி. சோமசேகர் (யஸ்ஷ்வந்தபுரம்), பைரதி பசவராஜ் (கே. ஆர். புரம்), மஜதவை சேர்ந்த எச். விஷ்வநாத் (உன்சூர்), கோபாலையா (மகாலட்சுமி லே அவுட்), நாராயணகவுடா (கே. ஆர். பேட்டை), முனிரத்னம் (ராஜராஜேஸ்வரிநகர்) ஆகிய 12 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அவர்களை தொடர்ந்த 9ம் தேதி ஆர். ரோஷன்பெய்க் (சிவாஜிநகர்) ராஜினாமா செய்தார்.

நேற்று அமைச்சர் எம்பிடி நாகராஜ் (ஒசகோட்டை) மற்றும் டாக்டர் கே. சுதாகர் (சிக்கபள்ளாபுரா) ஆகியோர் ராஜினாமா செய்தனர். ஆளும் கூட்டணியில் 16 எம்எல்ஏகள் ராஜினாமா செய்தது மற்றும் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து வந்த ஆர். சங்கர் மற்றும் எச். நாகேஷ் ஆகிய 2சுயேட்சை எம்எல்ஏகள் ஆதரவு வாபஸ் பெற்றதால் பேரவையில் கூட்டணி அரசின் பலம் குறைந்து விட்டது.

அதே சமயத்தில் பிரதான எதிர்கட்சியான பாஜவின் பலம் கூடியது. இதனிடையில் ஆளும் கட்சி மீது அதிருப்தி கொண்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபின் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏகளை சமாதானம் செய்வதற்கான முயற்சியை கூட்டணி கட்சி தலைவர்கள் பல வழிகளில் மேற்கொண்டனர்.

அதிருப்தியாளர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வசதியாக காங்கிரஸ்-21 மற்றும் மஜதவில் உள்ள 9 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அந்தந்த கட்சி சட்டமன்ற தலைவர்களிடம் கடிதம் கொடுத்தனர். இவ்வளவு கீழே இறங்கியும் அதிருப்தியாளர்கள் சமாதானமடையாமல் பிடிவாதமாக இருந்தனர்.

மும்பையில் தங்கியுள்ள எம்எல்ஏகளை நேரில் சந்தித்து பேசுவதற்காக அமைச்சர்கள் டி. கே. சிவகுமார், ஜி. டி. தேவகவுடா உள்பட நான்கு பேர் சென்று சந்திக்க முயற்சித்தும் முடியாமல் வெறுமையாக திரும்பினர்.

இந்நிலையில் அரசு சந்தித்து வரும் நெருக்கடியான நிலையில் அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து பெங்களூருவில் உள்ள கே. கே. விருந்தினர் மாளிகையில் இன்று காலை இருகட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்வர் குமாராமி, துணைமுதல்வர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், கே. சி. வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் ஆகியோர் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் முடிந்த பின் வெளியில் வந்த முதல்வர் குமாரசாமி, கூட்டணிக்கு எத்தனை நெருக்கடி வந்தாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். அதற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை.

ஆட்சியை எதிர்நோக்கி வரும் எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இதனிடையில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கொடுத்துள்ள கடிதத்தை ஏற்காமல் தாமதப்படுத்தி வருவதாக சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக 10 எம்எல்ஏகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று காலை தலைமை நீதிபதிர் ரஞ்சன் கோகாய் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, 10 எம். எல். ஏகளின் சார்பில் ஆஜரான முன்னாள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தில், ‘‘அதிருப்தி எம். எல். ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்குள் மீண்டும் சபாநாயகரிடம் தங்களது ராஜினாம கடிதத்தை கொடுக்க இருக்கிறார்கள்.

இதையடுத்தாவது சபாநாயகர், அதிகார துஸ்புரியோகம் செய்யாமல் அவருக்கே உரிதான பணியை செய்ய வேண்டும்’’ என்றார். இதையடுத்து தலைமை நீதிபதி கர்நாடகா அதிருப்தி எம். எல். ஏகள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும்.

அதனை பரிசீலனை செய்து உரிய உத்தரவை மாலைக்குள் சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும். இது குறித்த அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார். இதனால் பெங்களூரில் நாளுக்கு, நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது.

அரசியல் குழப்பமும்நீடித்து வருகிறது.

.

மூலக்கதை