அயோத்தி நில பிரச்னை வழக்கில் ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அயோத்தி நில பிரச்னை வழக்கில் ஒருவாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

புதுடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் ஒருவாரத்திற்குள் சமரச குழு இடைகால அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2. 77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினர் உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன்.

இந்த வழக்குகள் முன்னதாக தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து பின்னர் வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியமைக்கப்பட்டது.

அதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ். ஏ. பாப்டே, டி. ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின் உத்தரவில்,”அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மூன்று பேர் கொண்ட சமரச நடுநிலையாளர்கள் கொண்ட குழுவை நீதிமன்றம் நியமித்தது. அதில் ஓய்வு பெற்ற நீதிபதி எப். எம். கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனை குறித்து பைசாபாத்தில் பேச்சுவார்த்தை மேற்கண்ட நடுநிலையாளர்கள் குழு கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் முதல் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில்,” அயோத்தி நில பிரச்சனை தொடர்பாக இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் நீண்ட ஆண்டு பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்கிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இருதரப்பிலும் இருக்கும் பிரச்சனையையும் பேசி தீர்க்க நடுநிலையாளர் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்னிலையில் இந்து அமைப்புகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சிங் விஷாரத் ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்தார். அதில்,”பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில் முதற்கட்ட பேச்சு வாரத்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக எதுவும் தற்போதுவரை தெரியவில்லை.

மேலும் இதுகுறித்து நடுநிலையாளர்கள் கொடுத்துள்ள தகவலிலும் நம்பகத்தன்மை தான் ஏற்பட்டுள்ளது. மேலும் சமரச பேச்சு வாரத்தைக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீதிமன்றம் கூடுதலாக கால அவகாசம் வழங்கியுள்ளதை ஏற்க முடியாது.

அதனால் வழக்கை முன்கூட்டியே பட்டியலிட்டு நீதிமன்றம் விரைந்து விசாரித்து இரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பதாக உறுதியளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து அமைப்பு சார்பான வாதத்தில், அயோத்தி நிலம் தொடர்பாக அமைக்கப்பட்ட சமரச குழு சரியாக செயல்படவில்லை. இதே நிலை நீடித்தால் விசாரணை தற்போது முடியாது.

மேலும் இது சரியான கோணத்தில் தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் சமரச குழு மீது எங்களுக்கு நமிப்பிக்கை எழவில்லை.

இதுகுறித்து நாங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தோம். ஆனால் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சமரச குழு தரப்பு வைத்த வாதத்தில், அயோத்தி நிலம் தொடர்பான பிரச்னைகள் குறித்து, அதன் ஆலோசணை மற்றும் விவரங்களை சேகரிக்கும் விவகாரத்தில் சமரச குழு சரியான கோணத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும், தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. என தெரிவித்தனர்.

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவில், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உருவாக்கப்பட்டுள்ள சமரச குழு வரும் வியாழக்கிழமைக்குள் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதில் அனைத்து தரப்பு விவாதங்கள், நடவடிக்கை, செயல்பாடு.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம். அனைத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்.

அதற்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தினமும் விசாரணை நடைபெறும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

.

மூலக்கதை