தாமிரபரணியில் தொடரும் மணல் கடத்தல்: கரைகளும் கபளீகரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாமிரபரணியில் தொடரும் மணல் கடத்தல்: கரைகளும் கபளீகரம்

நெல்லை: நெல்லை மாவட்டம், மேற்குத் ெதாடர்ச்சி மலையில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிபரணி ஆறு அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, பாளையங்கோட்டை, சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம், ஏரல், ஆத்தூர் வழியாக ஓடி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணியின் மூலம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

நெல்லை, தூத்துக்குடி மட்டுமல்லாது விருதுநகர் மாவட்டம் என 3 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் அள்ளியதால், குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் கூட புதர் மண்டி சாய்ந்து விட்டன.

தாமிரபரணில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சீவலப்பேரி, வல்லநாடு ஆற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கடத்தல் ஜரூராக நடக்கிறது. வருவாய் துறை, போலீசாரை சரி கட்டிக் கொண்டு லாரிகளில் ஆற்று மணல் கடத்தப்படுகிறது.

ஆற்றில் மணல் அள்ளுவது மட்டுமின்றி ஆற்றங்கரையையும் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர்.

இதனால் ஆற்றின் போக்கு மாறுபடுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்ற போது போலீசை பார்த்ததும் மணல் கொள்ளையர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் தப்பியோடி விட்டனர்.

அங்கிருந்த மணல் லாரியை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

அந்த பகுதியில் மேல் உள்ள மணல் சாதாரண மணலாக இருந்த போதிலும், தோண்டப்பட்ட பகுதியில் ஆற்று மணல் வளமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த மணல்களை லாரிகளில் கடத்திச் சென்று கடத்தல் கும்பல் கொள்ளை லாபம் அடித்து வருகிறது.

இதனால் தாமிரபரணி ஆற்றின் மணல் வளம் நாளுக்கு நாள் சுரண்டப்பட்டு வருகிறது.

எனவே வருவாய் துறையினர், போலீசார் இணைந்து ஆற்றுப் பகுதிகளில் செக் போஸ்ட் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

.

மூலக்கதை