ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்: தஞ்சையில் நாளை தொடங்குகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம்: தஞ்சையில் நாளை தொடங்குகிறது

தஞ்சை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி தரமுடியாது என நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தஞ்சையில் விவசாயிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நாளை தொடங்குகிறது. வரும் 23ம் தேதி 7 மாவட்டங்களில் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கும், ஓஎன்ஜிசி, ஐஓசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்து உள்ளது.

விவசாய நிலங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் இந்த திட்டங்களை தொடங்க ஆய்வு பணிக்கு இப்போது அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அந்த நிறுவனங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும், விவசாயம் பாழாகிவிடும் என எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் தினந்தோறும் ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசோ, நாங்கள் அனுமதி கொடுத்தால் தான் ஹைட்ரோ கார்பன் பணியை தொடங்க முடியும். நாங்கள் இதுவரை யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை.

இனியும் கொடுக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவித்தது. ஆனாலும், டெல்டாவில் முதல்கட்ட பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

நேற்று மன்னார்குடி அருகே உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதற்கு நடப்பு சட்டமன்ற கூட்டத்திலேயே சட்டம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 23ம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பேரணியாக சென்று அந்தந்த மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிப்பது என காவிரி டெல்டா பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவித்து உள்ளது.   இந்த நிலையில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.



இதுதொடர்பாக தஞ்சையில் நேற்று அவர் அளித்த பேட்டி: காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலேயே இதற்கான தீர்மானம் நிறைவேற்றி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.   இந்த கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன் நாளை (12ம் தேதி) முதல் கோரிக்கை நிறைவேறும் வரை பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

வாழ்வாதார போராளி முகிலனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



.

மூலக்கதை