தோனி ரன் அவுட்டானதற்கு அம்பயரின் கவனக்குறைவுதான் காரணமா?...சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங்

தினகரன்  தினகரன்
தோனி ரன் அவுட்டானதற்கு அம்பயரின் கவனக்குறைவுதான் காரணமா?...சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங்

புதுடெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ரன் அவுட்டானதற்கு அம்பயரின் கவனக்குறைவுதான் காரணம் என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணியை சந்தித்தது. நேற்று முன்தினம் நடந்த இந்தப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், மீதமுள்ள ஆட்டம் நேற்று நடந்தது. 240 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரோஹித், ராகுல், கோலி என முதல் 3 வீரர்களும் 1 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். ஜடேஜா, தோனி இறுதிகட்டத்தில் போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தோனி ரன் அவுட் ஆனது விமர்சிக்கப்பட்டாலும், தொடக்க வீரர்கள் சொதப்பியதே மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தோனி ரன் அவுட் செய்யப்பட்டபோது வட்டத்திற்கு வெளியே 6 ஃபீல்டர்கள் இருந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, இந்திய அணி பேட்டிங்கின்போது, 48வது ஓவரில் ஃபெர்குசன் வீசிய பந்தில் தோனி ரன் அவுட்டானார். அவர் ரன் அவுட்டானபோது, 30 யார்டுக்கு வெளியே 6 வீரர்கள் ஃபீல்டிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். ஐ.சி.சி விதிகளின்படி, கடைசி பத்து ஓவர்களில் அதிகபட்சம் 5 ஃபீல்டர்கள் மட்டும்தான் 30 யார்டுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விதிமீறி 6 பேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அம்பயர் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார் என்று வீடியோக்கள் வைரலாகின. அம்பயர் இதைக் கவனித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஃபீல்டிங் நிறுத்திவைக்கப்பட்ட மைதானத்தின் புகைப்படத்தையும் அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஆனால் திரையில் காண்பிக்கப்பட்ட கிராபிக் காட்சியில் கூட பிழை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் அந்தக் குறிப்பிட்ட பந்துக்கு முன்னர் தேர்ட் மேன் ஃபீல்டர் 30 யார்டு வட்டத்துக்குள் அழைக்கப்படுவதாகவும் கமென்டரியில் வருகிறது. ஒருவேளை 6 ஃபீல்டர்கள் இருந்து அதனை நடுவர் கவனித்திருந்தாலும், அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டிருக்கும். ஒரு ஃப்ரீ-ஹிட் கிடைத்திருக்கும். அதை எதிர்கொள்ள அப்போதும் தோனி களத்தில் இருக்க மாட்டார். காரணம் நோபாலில் ரன் அவுட் திரும்பப் பெறப்படமாட்டாது. இந்த நிலையில், 6 ஃபீல்டர்கள் வட்டத்திற்கு வெளியே நிற்கும் போதுதான் தோனி இரண்டாவது ரன் எடுக்க ஓடி ரன் அவுட் செய்யப்படுவார். நடுவர் இதனை முன்னரே கவனித்து நோ-பால் என்று எச்சரிக்கை செய்திருந்தால், அடுத்த பால் ஃப்ரீ ஹிட் என்பதால், தோனி இரண்டாவது ரன் எடுக்க ஓடியிருக்க மாட்டார் என்றும் பலர் புலம்பி வருகின்றனர். ஐசிசி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மூலக்கதை