தோனி நோ-பாலில் அவுட்? அம்பயர் தவறால் தகர்ந்ததா கோப்பை கனவு

தினமலர்  தினமலர்
தோனி நோபாலில் அவுட்? அம்பயர் தவறால் தகர்ந்ததா கோப்பை கனவு

மான்செஸ்டர்: உலக கோப்பை அரையிறுதியில் தோனி ரன்அவுட் ஆன பந்து, 'நாட் பால்' ஆகி இருக்க வேண்டியது. அதனை அம்பயர் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு அரையிறுதியோடு முடிவுக்கு வந்தது.


இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில், நியூசி., இலக்காக நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல், 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, படுதோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக கட்டமைத்து கொண்டு சென்றனர். சிக்சர், பவுண்டரிகளாக ஜடேஜா விளாச, தோனி அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றார்.


முக்கிய தருணத்தில் ஜடேஜாவும் அவுட் ஆக, தனி ஆளாக போராட தோனி தயாரானார். அதற்கு தகுந்தாற்போல, 49வது ஓவரின் முதல் பந்தில் அருமையான சிக்சர் ஒன்றையும் விளாசினார். துரதிர்ஷ்ட வசமாக அந்த ஓவரின் 3வது பந்தில் 2 ரன்னுக்கு ஓட ஆசைப்பட்ட தோனி, ரன் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். ரசிகர்களின் நம்பிக்கையும் அதோடு தகர்ந்தது.


இந்நிலையில், தோனி ரன் அவுட் ஆன பந்து 'நாட் பால்' என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 3வது பவர் பிளே ஓவர்களான, 40- 50 ஓவர்களில் '30 மீட்டர்' வட்டத்திற்கு வெளியே, 5 பில்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் ஆனால், தோனி அவுட் ஆன பந்தில் உள்வட்டத்திற்கு வெளியே 6 பில்டர்களை நியூசி., கேப்டன் வில்லிம்சன் நிறுத்தியிருந்தார். ஐசிசி விதியின் படி, அந்த பந்து நாட் பால் என அம்பயர்கள் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதனை அம்பயர்கள் சரியாக கவனிக்காததால், இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. 'நோ - பால்' சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் இந்திய ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்க்கின்றனர்.

மூலக்கதை