வீடியோ கேம் விபத்தை நம்பி டிவீட் போட்டு வாங்கி கட்டிய பாகிஸ்தான் அரசியல் தலைவர்

தினகரன்  தினகரன்
வீடியோ கேம் விபத்தை நம்பி டிவீட் போட்டு வாங்கி கட்டிய பாகிஸ்தான் அரசியல் தலைவர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வீடியோ கேம் விபத்தை உண்மை என்று டிவீட் போட்ட அரசியல் கட்சியின் தலைவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். பாகிஸ்தானின் அவாமி தெக்ரிக் கட்சியின் பொது செயலாளர் குர்ராம் நவாஸ். இவர் டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டார். இந்த வீடியோவில் விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து மேலெழும்பும்போது எரிபொருள் நிரப்பிய லாரி மீது மோதுவது போல வந்து கண்ணிமைக்கும் நொடியில் விலகி செல்வது போன்று இருந்தது. இந்த வீடியோவுடன் அவர் ஒரு டிவீட்டையும் பதிவிட்டு இருந்தார். இதில், \'விமானியின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது, விமானிக்கு பாராட்டுக்கள். உலகில் இதுபோன்ற அரிய சம்பவம் எங்கும் நடந்ததில்லை\' என பதிவிடப்பட்டு இருந்தது.  குர்ராம் நவாஸ் பாராட்டை பலரும் விமர்சித்து பதில் டிவீட் செய்துள்ளனர். காரணம் இந்த வீடியோவானது ஒரு பிரபல வீடியோ விளையாட்டாகும்.  இணையதளத்தில் கிராண்ட் தெப்ட் ஆட்டோ அதாவது ஜிடிஏ என்ற பிரபல வீடியோ விளையாட்டாகும். இதன் மூலமாக தான் இந்த விமான விபத்து வீடியோவும் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் வீடியோவின் உண்மை தன்மை குறித்து அறிந்து கொள்ளாமல் அதுகுறித்து டிவீட் செய்துள்ள குர்ராம் நவாசை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

மூலக்கதை