காங்., பாஜக அடுத்தடுத்து போராட்டம்... பெங்களூருவில் உச்சகட்ட பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்., பாஜக அடுத்தடுத்து போராட்டம்... பெங்களூருவில் உச்சகட்ட பரபரப்பு

பெங்களூரு: காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் பெங்களூரில் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்களால், உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஓட்டல் முன்பு கர்நாடகா அமைச்சர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், ராஜினாமாவை ஏற்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் என மொத்தம் 15 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலையில் உள்ளது. இதில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.

இவர்களில் சிலர் அமைச்சர் பதவி கேட்டும், எதிர்கட்சியான பாஜவின் வலையில் சிக்கியதால், தற்போது அதிருப்தி கோஷ்டிகளாக உருவாகி மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்தி அமைச்சர் பதவி வழங்க வசதியாக, தற்போது பதவியில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வர் குமாரசாமியிடம் அளித்தனர்.

‘எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்களை ஏற்பது குறித்து விதிமுறைப்படி தான் முடிவு எடுக்க முடியும்’ என்று சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்த நிலையில், 5 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் தான் முறைப்படி இருப்பதாகவும், எட்டு எம்எல்ஏக்களின் கடிதங்கள் சட்ட விதிமுறைப்படி இல்லை என்றும் கூறி ஏற்க மறுத்துள்ளார்.

இதனிடையே, மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் 10 காங்கிரஸ் - மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி மும்பை காவல்துறை ஆணையருக்கு நேற்று கடிதம் எழுதி அனுப்பினர். அதில், ‘முதல்வர் குமாரசாமி, அமைச்சர் சிவக்குமார் ஆகியோர் எங்களை பார்க்க வரக்கூடாது.

இவர்கள் தங்களது ஆட்களுடன் ஓட்டலுக்கு படையெடுக்க உள்ளதால், எங்களை மிரட்டி அச்சுறுத்தல் கொடுக்க வாய்ப்புள்ளது. அதனால், எங்களுக்கு போதிய பாதுகாப்பு தரவேண்டும்’ என்று கோரியுள்ளனர்.

இதையடுத்து நேற்றிரவு முதல் எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் ஓட்டலைச் சுற்றி ரிசர்வ் மற்றும் மாநில போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் இன்று காலை மும்பை ஓட்டலுக்கு வந்தார்.

ஆனால், அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க அமைச்சர் சிவக்குமாருக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதனால், அவர் ஓட்டலின் வாயிலில் நீண்ட நேரம் காத்திருந்தார்.

அங்கு பதற்றமான சூழல் இருந்ததால், காங்கிரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சிலர் கோஷமிட்டனர்.

அப்போது, அமைச்சர் சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பை ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்களை சந்தித்து பெங்களூரு திரும்பும்படி வலியுறுத்த வந்தேன். மும்பையில் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் தங்கள் கடமையைச் செய்யட்டும். உள்ளே இருக்கும் எம்எல்ஏக்கள் எங்களது நண்பர்கள்.

அரசியலில் நாங்கள் ஒன்றாக பிறந்தோம், அரசியலில் நாங்கள் ஒன்றாக இறப்போம். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் கூட, எங்களது நண்பர்களை சந்திக்க தடை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். ஆனால், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள், மும்பை ஓட்டலின் வெளியே நின்று கொண்டு ‘திரும்பி போ, திரும்பி போ; சிவக்குமார் திரும்பி போ’ என கோஷம் எழுப்பினர்.

இதேபோல், பாஜ கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர் சிவகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அதிருப்தி அடைந்த அமைச்சர் சிவக்குமார், ஒருகட்டத்தில் ஓட்டல் வாயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஓட்டலில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் 10 பேரின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘சபாநாயகரிடம் முறையான ராஜினாமா கடிதம் கொடுத்தும், அதை அவர் ஏற்காமல் மறுத்துவருகிறார். அவர், தனது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.

எனவே, எங்களது ராஜினாமாவை ஏற்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹ்தி, ‘தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, ‘மனுவை இன்றே விசாரித்து உத்தரவிட முடியாது.

விரைந்து விசாரிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்’ என்று உத்தரவிட்டனர். இதனால், அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்ற நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

பாஜ - காங்.

ஆர்ப்பாட்டம்

ஆளும் கூட்டணி பெரும்பான்மை பலமிழந்துள்ளதால் உடனடியாக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கூறி பெங்களூரு மகாத்மாகாந்தி சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. தொடர்ந்து, சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமாரை சந்தித்து, ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்எம்ஏக்களின் கடிதத்தை ஏற்றுகொள்ளக் கோரி மனு கொடுத்தனர்.

மாலையில், ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, மாநிலத்தில் ஆளும் கூட்டணி அரசு பேரவையில் பெரும்பான்மை பலமிழந்துள்ளதால், ஆட்சியை கலைக்ககோரி மனு கொடுக்க உள்ளனர். இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, மத்திய பாஜ அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனால் பெங்களூரில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

.

மூலக்கதை