மழையால் தடைபட்ட இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி: இன்றைய ‘ரிசர்வ் டே’ போட்டியில் என்ன நடக்கும்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
மழையால் தடைபட்ட இந்தியா  நியூசிலாந்து அரையிறுதி: இன்றைய ‘ரிசர்வ் டே’ போட்டியில் என்ன நடக்கும்?

மான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் திணறிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கத் திணறினர். அணியின் ரன் ரேட் 3. 5 என்ற நிலையில் இருந்தது.

தொடர்ந்து, 35 ஓவர்களை கடந்த போது அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சுறுசுறு அடைந்ததால், அணியின் ரன் ரேட் ஓவருக்கு 4 என்ற நிலையை கடந்தது.

இந்நிலையில் 46. 1 ஓவரில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்திருந்தது.

மழை நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து இடைவெளிவிட்டு பெய்து கொண்டே இருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால், ேநற்றைய ஆட்டம் தடைபட்டதால் ‘ரிசர்வ் டே’ முறையில் இன்று அதே மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.

நியூசிலாந்து அணி தனது பேட்டிங்கில் மீதமுள்ள 23 பந்துகளை எதிர்கொள்ளும். அதன்முடிவில் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

நேற்றைய ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் அனல் பறக்க பந்து வீசினர்.

முதல் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் திணறினர். ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் மார்டின் கப்டில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் மற்றும் நிக்கோலஸ் மிகவும் பொறுமையாக ஆடினர்.

இந்த ஜோடியை பிரிக்க நீண்ட நேரம் போராடிய இந்திய அணிக்கு 19 ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா சிறப்பான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

ஜடேஜாவின் பந்தில் நிகால்ஸ் போல்ட் ஆகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் 35 ஓவர்கள் வரை நிதானமாக ஆடினர்.

அரை சதம் அடித்த வில்லியம்சன் 26வது ஓவரில் 67 ரன்கள் எடுத்த நிலையில் சாகல் பந்தில் ஆட்டமிழந்தார். இதோடு வில்லியம்சன் இந்த உலகக்கோப்பையில் மட்டும் 548 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் மார்ட்டின் கப்டில் 547 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 2வது அரைஇறுதி போட்டியில் எட்ஜ்பாஸ்டனில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து  - இந்தியா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளில் எந்த அணி இறுதிபோட்டிக்கு தகுதியாகும் என்பது, இன்றும், நாளையும் தெரிந்துவிடும். தொடர்ந்து வரும் 14ம் தேதி லண்டனில் இறுதிபோட்டி நடைபெறவுள்ளது.

என்ன நடந்தால் யாருக்கு சாதகம்

* பிரிட்டன் நேரப்படி காலை 10. 30 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி) போட்டி துவங்கும்.

* நியூசிலாந்து அணி 46. 1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருக்கிறது.

இன்று 47வது ஓவரின் இரண்டாவது பந்தை புவனேஷ்வர் குமார் வீசுவார். நியூசிலாந்து எஞ்சிய 23 பந்துகளையும் சந்தித்து 50 ஓவர்களையும் நிறைவு செய்யும்.

அதன் பின்னர் இந்திய அணி சேசிங் செய்யும்.

* வானிலை அறிக்கைப்படி இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

* மழையால் ஆட்டம் பாதிக்கப்படவில்லை என்றால் டக் வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (டிஎல்எஸ்) முறை பின்பற்றப்படாது. ஆனால் மழை பெய்யும் பட்சத்தில் எந்தவொரு கட்டத்திலும் ‘டிஎல்எஸ்’ கணக்கீடு முக்கிய பங்கு வகிக்கும்.

* இன்றும் மழை பெய்து நியூசிலாந்து அணி ஆட்டத்தை துவக்க முடியாத நிலை ஏற்பட்டால், இந்தியா அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 148 ரன்கள் எடுக்க வேண்டியதிருக்கும்.

* அதேபோல், 25 ஓவராக இருந்தால் 172 ரன்கள்; 30 ஓவராக இருந்தால் 192 ரன்கள்; 35 ஓவராக இருந்தால் 209 ரன்கள்; 40 ஓவராக இருந்தால் 223 ரன்கள்; 46 ஓவராக இருந்தால் 237 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.* ஒருேவளை இந்திய அணி 20 ஓவர்கள் பேட்டிங் கூட செய்ய முடியாமல் போனால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். இப்படி ஒரு சூழல் உருவானால் ரவுண்ட் ராபின் சுற்றில் நியூசிலாந்தை விட இந்தியா அதிக புள்ளிகள் (ரன் ரேட்) எடுத்திருப்பதால் நேரடியாக இறுதி போட்டிக்குத் தகுதி பெறும்.

* ரிசர்வ் டே முறையில் இன்றைய போட்டி நடப்பதால், நேற்றைய போட்டியில் இரு அணியிலும் களமிறங்கிய வீரர்களே இன்றும் விளையாட வேண்டும்.

பேட்டிங் அல்லது பவுலிங்கில் மாற்று வீரர் விளையாடக் கூடாது.

* ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் நேற்று வாங்கிய நுழைவுச் சீட்டுகளை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரசிகர்கள் நுழைவுச் சீட்டை விற்க முடியாது.

.

மூலக்கதை