கர்நாடகாவில் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கப்படுமா?...சபாநாயகர் இன்று முடிவு: காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவில் 13 எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கப்படுமா?...சபாநாயகர் இன்று முடிவு: காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா?

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 13 எம்எல்ஏகள் கொடுத்துள்ள ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் இன்று பரிசீலனை செய்கிறார். அவர்கள் ராஜினாமா ஏற்கப்படுமா? நிராகரிப்படுமா? என்பதை வைத்து கூட்டணி ஆட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

பாஜ ஆட்சி அமையுமா என்பதும் இன்று தெரியவரும். இதனால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆளும் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு கடந்த ஓராண்டில் சில நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் 13 எம்எல்ஏகள் ராஜினாமா செய்துள்ளது மற்றும் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த இரு சுயேட்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால் பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆட்சியை காப்பாற்றி கொள்ள கடுமையான முயற்சியில் இரு கட்சி தலைவர்களும் ஈடுப்பட்டுள்ளனர். ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தங்கியுள்ள எம்எல்ஏகளை எப்படியாகிலும் தொடர்பு கொண்டு பேசி, சமாதானம் செய்வதற்கு அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 13 எம்எல்ஏகள் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அவரின் செயலாளர் விசாலாட்சியிடம் கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழழை தமிழகத்தின் வேலூரியில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க சென்ற சபாநாயகர் கே. ஆர். ரமேஷ்குமார், மூன்று நாட்களுக்கு பின் நேற்று மாலை பெங்களூரு திரும்பினார். இன்று சபாநாயகர் விதான்சவுதாவில் உள்ள அவரது அலுவலகம் வருகிறார்.

13 எம்எல்ஏகள் கொடுத்துள்ள ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்தபின் அதை ஏற்றுகொள்வதா, தள்ளுபடி செய்வதா? அல்லது ராஜினாமாவுக்கான நியாயமான காரணத்தை விளக்கும்படி கடிதம் அனுப்புவதா ? என்பதை தீர்மானிப்பார். சபாநாயகரின் முடிவுக்காக ஆளும் கூட்டணி மட்டுமில்லாமல் பிரதான எதிர்கட்சியான பாஜவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

மூன்று கட்சிகளின் எம்எல்ஏகள் கூட்டம்:-

மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ், மஜத மற்றும் பாஜ எம்எல்ஏகள் கூட்டம் தனித் தனியாக இன்று நடக்கிறது.

பெங்களூரு விதான்சவுதாவில் காங்கிரஸ் எம்எல்ஏகள் கூட்டம் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா தலைமையில் நடக்கிறது. இதில் பங்கேற்கும்படி கட்சி எம்எல்ஏகளுக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்க்கும் எம்எல்ஏகள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் புகார் கொடுப்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்எல்ஏகள் கூட்டம் முடிந்த பின், கட்சி எம்எல்ஏகளை சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது பெங்களூரு ஊரக மாவட்டம், தேவனஹள்ளி தாலுகாவில் நந்திகிரிமலை பகுதியில் உள்ள பிரஸ்டேஜ் சையில் கிளப் சொகுசு ஓட்டலில் தங்கியுள்ள மஜத எம்எல்ஏகளுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை ரெஸ்கோர்ஸ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி பல வழிகளில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆளும் கூட்டணி போல், சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் பி. எஸ். எடியூரப்பா தலைமையில் பெங்களூரு மல்லேஷ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜ எம்எல்ஏகள் கூட்டம் நடக்கிறது.

இதில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தால் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இன்று யாரும் ராஜினாமா இல்லை

இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த சபாநாயகர் இன்று பெங்களூரு திரும்பியுள்ளதால், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏகள் அவரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக தீவிரமாக கண்காணித்து அறிக்கை கொடுக்கும்படி மாநில உளவுதுறைக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதையேற்று உளவுதுறை நடத்திய கண்காணிப்பில் இன்று எம்எல்ஏகள் யாரும் ராஜினாமா கடிதம் கொடுக்கமாட்டார்கள் என்ற தகவலை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் முதல்வர் உள்பட மஜத மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நிம்மதி கொடுத்துள்ளது.

ஆனாலும் கர்நாடகாவில் உள்ள ஆட்சி, சபாநாயகர் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.

இதனால் கர்நாடகாவில் இன்று பரபரப்பு நிலவுகிறது.

.

மூலக்கதை