கிளைமேக்ஸை நெருங்குகிறது உலக கோப்பை போட்டி.... இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்?: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிளைமேக்ஸை நெருங்குகிறது உலக கோப்பை போட்டி.... இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார்?: இந்தியா  நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் கிளைமேக்ஸ் ஆட்டங்கள் துவங்கிவிட்டன. இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

ரவுண்ட் ராபின் சுற்றில் நடைபெற்ற 9 போட்டிகளில் எட்டில் வெற்றி; இங்கிலாந்து அணியுடனான ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் தோல்வி என, 15 புள்ளிகளுடன் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு சமமாக 11 புள்ளிகளே பெற்றிருக்கும் நியூசிலாந்து அணி, ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அதிர்ஷ்டவசமாக அரையிறுதிக்குள் புகுந்துவிட்டது.



விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

இதில் என்ன வேடிக்கை என்றால், ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடந்த 5 லீக் ஆட்டத்திலும் முதலில் பேட் செய்த அணியே வெற்றியை வசப்படுத்தி இருக்கிறது. இதனால், இன்று டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம்.



எப்படியும் இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்க, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில், மழைக்கான வாய்ப்பு 50 சதவீதம்; ஈரப்பதம் 78 சதவீதம்; காற்று மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகம்; அதிகபட்ச வெப்பநிலை  19 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை  14 டிகிரி செல்சியஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மழைக்கான வாய்ப்பு 50 சதவிகிதம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒருவேளை மழை பெய்து, போட்டி நடைபெறவில்லை எனில், அதற்கு மறுநாள் ‘ரிசர்வ் டே’முறைப்படி ஆட்டம் நடைபெறும். அதாவது மாற்று நாளில் போட்டியை நடத்துவது.



அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மட்டும் இந்த ‘ரிசர்வ் டே’முறை பின்பற்றப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்து போட்டி தடைபட்டால், மாற்று நாள் என்ற முறையில் நாளை அதே மைதானத்தில் போட்டி நடத்தப்படும்.

அப்போதும் மழை பெய்தால், புள்ளிப்பட்டியலில் அதிக புள்ளிகள் பெற்ற அணி என்ற அடிப்படையில், இந்தியா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். மற்றபடி போட்டி ஆரம்பித்து, இடையில் மழை பெய்து, மீண்டும் நிற்கும் பட்சத்தில், போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு ‘டிஎல்எஸ்’ முறைப்படி ஆட்டம் நடைபெறும்.

இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் வெட்டோரி கூறியுள்ள அறிவுரைகளில், ‘‘இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா.

இவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளார். அவரது பந்து வீச்சு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

அதனால் அவரின் பந்து வீச்சை நியூசிலாந்து வீரர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்; ஹர்திக் பாண்டியா, ஆகியோர் சுழற்பந்துவீச்சை கையாளும் விதம் அபாயகரமாக இருக்கிறது.

நியூசிலாந்து அணி அதிக ரன்களை எடுத்தால் மட்டுமே இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும்.

ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய வீரர்களின் பலவீனம், பலம் தெரியும்.

எனவே அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டும்’’ என கூறியுள்ளார். இதேபோல், இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள அறிவுரையில், ‘‘அரையிறுதி போன்ற முக்கியமான போட்டியில் சரியாக 5 பவுலர்களுடன் களமிறங்கக்கூடாது.

ஒரு பவுலிங் ஆப்சன் கூடுதலாக தேவை. எனவே ஜடேஜாவை அணியில் எடுக்க வேண்டும்.

அரையிறுதி போட்டி நடக்கவுள்ள மான்செஸ்டாரில் ஷமி ஏற்கனவே அசத்தலாக வீசியுள்ளார். அந்த மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ஷமி அபாரமாக வீசினார்.

எனவே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஷமி ஆடுவதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை