மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை... மீண்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை... மீண்டும் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை: மழையால் கடந்த வாரம் 40 பேர் பலியான நிலையில், மும்பையில் அடுத்த 24 மணி நேரம் பலத்த மழை பெய்ய உள்ளதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை கடந்த வாரம் 5 நாட்கள் விடாமல் வெளுத்து வாங்கியது. மும்பையில் மட்டும் 45 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த கனமழையால் நகரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

குர்லாவில் குடிசைகள் மீது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 28 பேர் பலியாகினர். மும்பையில் இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில், நேற்று மீண்டும் கனமழை பெய்தது.

காலை நேரத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் 3 மணி நேரத்தில் மட்டும் 20 மி. மீ. மழையளவு பதிவானது.

தொடர்ந்து பெய்த மழையால் மும்பை நகர் வெள்ளக்காடாக மாறியது.

செம்பூர் திலக் நகர் ரெயில்வே காலனி, விக்ரோலி கன்னம்வார் நகர், கிங்சர்க்கிள், சயான், தாராவி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. நவிமும்பையில் சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்ததால், சாலையோரம் நின்ற கார்கள் வெள்ளத்தில் மிதந்தன.

ரயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்ததால், ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதேபோல தானே, பால்கர், ராய்காட்டிலும் மழை கொளுத்தியதால், அங்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

நவிமும்பை நகரமும் வெள்ளத்தில் தத்தளித்தது.

மொத்தத்தில் கடந்தவாரம் பெய்த மழையில் 40 பேர் பலியான நிலையில், மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதில் மும்பையில் 250 மி. மீ. அளவுக்கு கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

அதனால், மும்பை நகருக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் விமான போக்குவரத்து, ரயில் புறப்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை