யமுனா 6 வழிச் சாலையில் உள்ள கால்வாயில் 40 அடி ஆழத்தில் பஸ் விழுந்து 29 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
யமுனா 6 வழிச் சாலையில் உள்ள கால்வாயில் 40 அடி ஆழத்தில் பஸ் விழுந்து 29 பேர் பலி

ஆக்ரா: யமுனா எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, தடுப்பை உடைத்துக் கொண்டு 40 அடி ஆழ கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர். டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு இரண்டடுக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து யமுனா அதிவிரைவு 6 வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து கொண்டு 40 அடி ஆழத்தில் உள்ள கால்வாயில் இன்று அதிகாலை 4. 15 மணியளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 29 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த ஆக்ரா மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால்வாயில் சிக்கிக் கிடந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் 50 பேர் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், டிரைவர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், விபத்து நடத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து ஆக்ரா போலீஸ் எஸ்பி பாப்லோ குமார் கூறுகையில், ‘‘டபுள் டக்கர் பஸ்சில் 50 பேர் பயணம் செய்துள்ளனர்.

டிரைவர் தூக்கக் கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தி உள்ளார். 29 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டது.

படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்’’ என்றார்.

.

மூலக்கதை