காங்கிரஸ் கட்சியில் ராகுலை தொடர்ந்து சிந்தியா ராஜினாமா

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் கட்சியில் ராகுலை தொடர்ந்து சிந்தியா ராஜினாமா

போபால்: ராகுலை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகினர்.

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஏற்கனவே மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதேபோல், மக்களவை தேர்தலில் கட்சியின் மந்தமான செயல்திறனுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு தீபக் பப்ரியா, விவேக் தங்கா உள்ளிட்ட சில மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.



ராகுல் காந்தி ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளதால், மூத்த நிர்வாகிகளின் ராஜினாமாக்களை புதியதாக தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை, அந்த ராஜினாமாக்கள் ஏற்கப்படாமல் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கடிதம் ஒன்றை டுவிட் செய்திருந்தார்.

ஆனால், அவர் தனது ராஜினாமாவை திரும்பப் பெறவும், தொடர்ந்து கட்சியை வழிநடத்தவும் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய பொதுச்செயலாளருமான ஜோதிராதித்யா சிந்தியா, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பஞ்சாப் முதல்வரும், மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இளமையான சக்தி வாய்ந்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்போதுதான் கட்சியை பலப்படுத்த முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதனால், வரும் சில நாட்களில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடும்பட்சத்தில், காங்கிரஸ் இளம் தலைவர்களான சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் பெயரும் தலைவர் பட்டியலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.

மூலக்கதை