கர்நாடகாவில் 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி, காங்-மஜத கூட்டணி ஆட்சி தப்புமா?: மேலும் 10 எம்எல்ஏக்களை இழுக்க எடியூரப்பா பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகாவில் 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா எதிரொலி, காங்மஜத கூட்டணி ஆட்சி தப்புமா?: மேலும் 10 எம்எல்ஏக்களை இழுக்க எடியூரப்பா பேச்சு

பெங்களூரு: கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணியை ேசர்ந்த 11 எம்எல்ஏக்கள் திடீரென நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாகவும் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை கைப்பற்ற பாஜ தலைவர் எடியூரப்பா பேச்சு நடத்தி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதிலிருந்து மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்தாண்டு மே 23ம் தேதி எச். டி. குமாரசாமி தலைமையில் மஜத-காங்கிஸ் கூட்டணி அரசு பதவியேற்றது.

அதை தொடர்ந்து ஜூன் மாதம் இரண்டாம் கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்தது. ஜூலை மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்தது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலத்தில் கூட்டணி அரசு அமைந்து ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் முழுமையாக அமைச்சரவை விஸ்தரிப்பு நடக்கவில்லை.

வாரிய, கழகங்களின் தலைவர் பதவியும் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனிடையில் கூட்டணி கட்சிகள் இடையில் குழப்பம் தலை தூக்கியது. இதை பயன்படுத்தி, கூட்டணி ஆட்சியை கலைக்கும் வகையில் ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜ கையில் எடுத்துள்ளதாகவும் சில காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜாரகிஹோளி ஆதரவாளர்களை வைத்து கொண்டு பாஜவில் இணைவதாக மிரட்டி வந்தார். அமைச்சர் பதவி கிடைக்காததால் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதும் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.

இருப்பினும் கூட்டணி ஆட்சியை எந்த குழப்பமும் இல்லாமல் நடத்த வேண்டும் என்பதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் உறுதியாக இருந்தனர். கூட்டணி ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பை முன்னாள் முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் பரமேஷ்வர், நீர்பாசனத்துறை அமைச்சர் டி. கே. சிவகுமார் ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்படைத்தார்.

அதையேற்று அதிருப்தி எம்எல்ஏகளுடன் சித்தராமையா சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

திடீர் அரசியல் திருப்பம்

மாநில மஜத-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில எம்எல்ஏகள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது.

அதற்கு பிள்ளையார் சுழிபோடும் வகையில் கடந்த 1ம் தேதி விஜயநகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து நேற்று ரமேஷ்ஜாரகிஹோளி, மகேஷ்குமட்டஹள்ளி, பி. சி. பாட்டீல், பிரதாப்கவுடா பாட்டீல், எஸ். டி. சோமசேகர், பைரதிபசவராஜ், சீனிவாஸ் ஹெப்பார், எச். விஷ்வநாத், நாராயணகவுடா, கோபாலையா ஆகிய 11 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பெங்களூரு விதானசவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகரின் செயலாளர் விசாலாட்சியிடம் கொடுத்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முனிரத்னம் (ராஜாஜிநகர்), சவுமியாரெட்டி (ஜெயநகர்) ஆகியோரும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக கூறினாலும் சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்யவில்லை. அதை தொடர்ந்து அனைவரும் ராஜ்பவன் சென்று ஆளுநர் வி. ஆர். வாலாவை சந்தித்து ராஜினாமா கொடுத்துள்ளதற்கான தகவலை தெரிவித்தனர்.

பாஜ காய் நகர்த்தலுக்கு
கிடைத்த வெற்றி

கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்களை வைத்து கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை பகிரங்கமாக மூன்று முறை மேற்கொண்டு தோல்வியடைந்த பாஜ, மீண்டும் இம்முயற்சியை தொடராமல் கைவிடும் என்று வெளியில் தெரிவித்து, அதே சமயத்தில் சத்தமில்லாமல் கூட்டணியை உடைக்க காய் நகர்த்தியது.

கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்களை இழுப்பதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர்கள் சி. பி. யோகேஷ்வர், அரவிந்தலிம்பாவளி, ஆர். அசோக் மற்றும் மாநில பாஜ பொதுசெயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் ரகசியமாக ஆபரேஷன் தாமரை திட்டத்திற்கு வாசல் திறந்தனர்.

அவர்கள் விரித்த வலையில் முதலில் விழுந்தவர் ஆனந்த்சிங், அவர் ராஜினாமா கொடுத்ததின் மூலம் கிடைத்த பலனை அடிப்படையாக வைத்து நான்கு குழுவாக பிரிந்து செயல்பட்டனர். அதன் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலனாக ஒரே நாளில் 11 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் அளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

11 எம்எல்ஏக்களின் ராஜினாமாவின் பின்னால் பாஜவின் கைவரிசை உள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் ஆளுநர் மாளிகை வந்த எம்எல்ஏக்களை சி. பி. யோகேஷ்வர் வரவேற்றார். சந்திப்பிற்கு முன் மத்திய அரசின் ஒத்துழைப்பில் தேவனஹள்ளி விமான நிலையத்திற்கு செல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன் குடியரசு தலைவர், பிரதமர், வெளிநாட்டு அதிபர்கள் வந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் எச். ஏ. எல் விமான நிலையம், 11 எம்எல்ஏக்கள் மும்பை செல்ல பயன்படுத்தப்பட்டது, மும்பையில் பாஜவினர் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தது போன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

காங்கிரஸ்-மஜத மூத்த அமைச்சர்கள் 10 பேர் நாளை ராஜினாமா ?

மாநிலத்தில் ஆளும் கூட்டணிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக நேற்று இரவு துணைமுதல்வர் பரமேஷ்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் கட்சியின் மாநில செயல்தலைவர் ஈஸ்வர்கண்ட்ரே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் தான் கட்சிக்கு எதிராக செயல்படுவதால், அதிருப்தியாளர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வசதியாக மூத்த அமைச்சர்கள் பதவியை  தியாகம் செய்யலாம் என்று தீர்மானித்ததாகவும் இதில் முதல் கட்டமாக கே. ஜே. ஜார்ஜ், டி. கே. சிவகுமார், ஆர். வி. தேஷ்பாண்டே, கிருஷ்ணபைரேகவுடா, யு. டி. காதர் ஆகிய 5 பேர் ராஜினாமா செய்ய முடிவு செய்தனர்.

காங்கிரஸ் வழியில் மஜதவில் உள்ள புட்டராஜு, சா. ரா. மகேஷ், பண்டெட்டா காஷம்பூர், எஸ். ஆர். சீனிவாஸ், மனகோலி ஆகிய 5 பேர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் குமாரசாமி இன்று பெங்களூரு வந்தவுடன் அவரிடம் ஆலோசனை நடத்தியபின் நாளை ஆளுநரை சந்தித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ராஜினாமா பட்டியல் நீளுமா?

இந்நிலையில் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள அஞ்சலி நிம்பால்கர் (கானாபுரா), வி. முனியப்பா (ஷிட்லகட்டா), பி. நாகேந்திரா (பல்லாரி ஊரகம்), சினிவாசகவுடா (கோலார்), நிசர்கா நாராயணசாமி (தேவனஹள்ளி) உள்பட பத்திற்கும் மேற்பட்ட இரு கட்சிகளை சார்ந்த எம்எல்ஏக்கள் நாளை பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் தெரியவருகிறது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க கர்காடக பாஜ தலைவர் எடியூரப்பா பேச்சு நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி அதிருப்தியில் உள்ள மேலும் 10 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது. இதிலிருந்து மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பையில் 10 எம்எல்ஏக்கள்

ஆளும் கூட்டணி மீது அதிருப்தி கொண்டு ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களில் பி. சி. பாட்டீல், ரமேஷ்ஜார்கிஹோளி, நாராயணகவுடா, எச். விஷ்வநாத், கோபாலையா, சிவராம் ஹெப்பார், எஸ். டி. சோமசேகர், பைரதிபசவராஜ், மகேஷ்குமட்டஹள்ளி, பிரதாப்கவுடா பாட்டீல் ஆகிய 10 பேர் மட்டுமே மும்பையில் உள்ளனர்.

ராமலிங்காரெட்டி, ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறப்படும் சவுமியாரெட்டி மற்றும் முனிரத்னம் ஆகியோர் மும்பை செல்லாமல் பெங்களூருவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சியில் உள்ள இன்னும் சில எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் திட்டத்தில் அவர்கள் பெங்களூருவில் உள்ளதாக தெரியவருகிறது.

ஆளுநர் கையில் பந்து

ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில் 11 எம்எல்ஏக்கள் சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர்.

கர்நாடக மாநில சட்டப்பேரவை விதிமுறைகளின்படி ராஜினாமா கடிதத்தை நேரடியாக சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும், அதை அவர் பரிசீலனை செய்து ராஜினாமா செய்தவரை அழைத்து ராஜினாமா செய்ததற்கான நியாயமான காரணம் குறித்து விசாரணை நடத்தி அவரிடம் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதி கொடுக்கும் காரணம் நியாயமாக இருக்கும் பட்சத்தில் சபநாயாகர் ராஜினாமாவை ஏற்றுகொள்வார்.

நியாயமான காரணமில்லை எனில் ராஜினாமா கடிதத்தை தள்ளுபடி செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது. இந்நிலையில் சபாநாயகர் 11 பேர் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும் வரை பெங்களூரு திரும்பாமலும் இரு கட்சி தலைவர்களின் கண்ணில் படாமலும் இருக்க முடிவு செய்துள்ளனர்.

வரும் செவ்வாய்கிழமை ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

ஒருவேளை ராஜினாமாவை அவர் ஏற்காமல் புறக்கணித்தால், ஆளுநர் மூலம் ராஜினாமாவை அங்கீகரிக்கும் முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

.

மூலக்கதை