நாடு முழுவதிலும் உள்ள 3 கோடி வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடு முழுவதிலும் உள்ள 3 கோடி வர்த்தகர்களுக்கு ஓய்வூதியம்

* ஒரே நாடு ஒரே மின்சார கிரிட்
* பட்ஜெட்டில் மத்திய அரசு புது  அறிவிப்பு

புதுடெல்லி : ‘‘நாட்டில் 3 கோடி வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சரக்கு போக்குவரத்துக்கு என்று தனிபாதைகள் அமைக்கப்படும்.

நாடு முழுவதும் மின் தேவையை சமாளிக்கும் வகையில் ஒரு கிரிட் திட்டம் (மின்சார தொகுப்பு)  கொண்டு வரப்படும். பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதுதான் மத்திய அரசின் இலக்கு’’ என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஆட்சி முடிவுறும் தருவாயில் பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜ இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது.

இதையடுத்து, முதல் முறையாக முழு நேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு, 1970ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, நிதித்துறையை கூடுதல் பொறுப்பு வகித்தார்.

இதனால் அப்போது அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால், முழு நேர பெண் நிதியமைச்சராக, நிர்மலா சீதாராமன் இன்று, 2019-2020ம் ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையொட்டி, இன்று காலை அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது துறை இணையமைச்சர்களுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார். சரியாக காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.

இதில் அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியில் 6வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவதுதான் மத்திய அரசின் இலக்கு. இதைநோக்கி மத்திய அரசு பயணித்து வருகிறது.

இதன் முதல் கட்டமாக, இந்த 2019ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 3 லட்சம் கோடி டாலராக உயரும்.

நாட்டின் சரக்கு போக்குவரத்து அதிகரித்தால்தான் பொருளாதார வளர்ச்சிக்கு வழி ஏற்படும். இதையொட்டி, நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு தனிபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வருகிறது. இதனால், அத்துறையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இத்துறையினருக்கு வழங்கப்படும் கடனில் 2 சதவீத மானியம் வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் ஏழை, எளிய மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

டிஜிட்டல் இந்தியாவின் பலனை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம். அதை சிறப்பாக நிறைவேற்றுவோம்.

அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் கொண்டு வரப்படும்.

ஆறுகளை சரக்கு போக்குவரத்து பயன்படுத்தும் திட்டம் கொண்டு வரப்படும். இரண்டாவது கட்ட சாகர் மாலா திட்டத்தின் கீழ், மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்.

ரயில்வேயில் புதிய முதலீடுகளை பெற, தனியார்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

3 கோடி சில்லரை வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். சாதாரண மக்களுக்காக பெரும் சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்திய நிறுவனங்கள் பொருளாதாரத்தை பெருக்குவதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகின்றன. மலிவு, விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் மின்தொகுப்புக்காக ஒரே கிரிட் திட்டம் கொண்டு வரப்படும்.

இதன் மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு மின்சாரத்தை உடனடியாக வழங்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

.

மூலக்கதை