மத்திய பட்ஜெட் குறித்த சுவாரஸ்யங்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய பட்ஜெட் குறித்த சுவாரஸ்யங்கள்

முதல் பட்ஜெட் தமிழர்

நாட்டின் முதல் மத்திய பட்ஜெட்டை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அப்போதைய நிதியமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த ஆர். கே. சண்முகம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரி, 1975ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியம், 1980, 1981ம் ஆண்டுகளில் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன், 1997ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஆகியோர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், ப. சிதம்பரம் மட்டும் 8 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

49 ஆண்டுகளுக்கு பின்

தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மத்திய நிதியமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். 1970ம் ஆண்டுக்கு பிறகு 2வது முறையாக ஒரு பெண் நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

49 ஆண்டுக்கு முன்பு நிதி அமைச்சராக இருந்த இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆனால் அவர் அப்போது பிரதமராகவும் இருந்தார்.

நிதித்துறையை தன்னிடம் வைத்திருந்ததால், பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

வர்த்தகம், பாதுகாப்பு அமைச்சர்

மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன், திருச்சியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்து, டெல்லி ஜேஎன்யுவில் பொருளாதாரத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். அதன்பின் வெளிநாட்டிற்கு சென்றவர் 1991ல் மீண்டும் இந்தியா வந்தார்.

2003 முதல் 2005 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவி; 2008ல் பாஜவில் இணைந்து கட்சியின் தேசிய செயற்குழுவின் உறுப்பினரானார். 2010ல் பாஜ செய்தி தொடர்பாளர்; 2014ல் பிரதமர் மோடி அரசில் வர்த்தகத்துறை அமைச்சர்.

2017ல் பாதுகாப்புதுறை அமைச்சரானார்.

சுவாமி தரிசனம்

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு  முன்னதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர், டெல்லியில் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பங்கு சந்தை உயர்வு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. அதன்படி சென்செக்ஸ் 40,027. 21 (+110 புள்ளிகள்), நிப்டி 11,976. 45 (+30 புள்ளிகள்) என்ற நிலையில் இருந்தது.

சூட்கேஸ் முறை மாற்றம்

பொதுவாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர்கள் காலம்காலமாக பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் வரும் போது, சூட்கேஸ் ஒன்றில் பட்ஜெட் அறிக்கைகளை எடுத்து வருவதே வழக்கம்.

ஆனால், முதன்முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சூட்கேஸை பயன்படுத்தாமல், ‘பைல் லெட்ஜர்’ வடிவிலான சிகப்பு நிற துணி உறையில், பட்ஜெட் அறிக்கையை எடுத்து வந்தார்.

அடிமைத்தனம்

சூட்கேஷூக்கு பதிலாக துணி உறை குறித்து பொருளாதார தலைமை ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘துணிப்பை நமது பாரம்பரியம். மேற்கத்திய சிந்தனையின் அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியேறுவதை இது குறிக்கிறது’’ என்றார்.

ஆனால், பல ஆண்டுகளாக பட்ஜெட் சூட்கேஸில் கொண்டு செல்லப்படும் மரபை நிர்மலா சீதாராமன் உடைத்தெறிந்தார் என்று பேசப்பட்டாலும், முன்னாள் பாஜ நிதியமைச்சர்கள் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல் ஆகியோர் ஏன் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வராமல் சூட்கேஸை பயன்படுத்தினார்கள்? என்று இணையதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

ஜனாதிபதி சந்திப்பு

பாரம்பரிய வழக்கத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்னர் நிதியமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பது வழக்கம். அதன்படி, இன்று காலை 10 மணியளவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது சகாக்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

நாடாளுமன்றம் வருகை

காலை 10. 15 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர், நாடாளுமன்றத்திற்கு வந்தனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரும் வந்தனர். பின்னர் பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.

அப்போது, பட்ஜெட் குறித்த விவரங்களை நிர்மலா சீதாராமன், அமைச்சரவையில் எடுத்துக்கூறினார்.

கேபினட் கூட்டம்

இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, நிதி அமைச்சக அலுவலகத்துக்கு காலை 9 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை நிதி அமைச்சர் அனுராக் தாக்கூர், நிதி துறை செயலாளர் எஸ். சி. கர்க், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் மற்றும் பிற நிதி அமைச்சக அதிகாரிகள் வந்தனர். அவர்கள், நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.

பின்னர், பட்ஜெட்டுக்கான முறையான ஒப்புதல் கேபினட் கூட்டத்தில் பெறப்பட்டது.

பட்ஜெட் நகல்

நாடாளுமன்ற வளாகத்திற்கு மத்திய நிதியமைச்சகத்தில் இருந்து, எம்பிக்களுக்கு பட்ஜெட் நகல்கள் தருவதற்காக, பட்ஜெட் நகல்கள் துணிப்பையிலான உரையில் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்து வரப்பட்டது.

அதனை, மோப்ப நாய்களை கொண்டு போலீசார் சோதனை செய்த பின்னர், நாடாளுமன்றத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.

நிர்மலா தாயார்

முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதனை காண்பதற்காக அவரது தாயார் சாவித்ரி, நாடாளுமன்றம் வந்தார்.

.

மூலக்கதை