காற்றில் கலந்துள்ள நச்சு வாயுவால் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் : மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காற்றில் கலந்துள்ள நச்சு வாயுவால் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் : மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல்

திருமலை திருமலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசடைந்துள்ளது. இதனால் ஏற்படும் நச்சு வாயுவால் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக  மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் திருமலையில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருப்பதி-திருமலை இடையே தினந்தோறும் 1500 டிரிப்புகள் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர பல்வேறு மாநிலங்களில் இருந்து கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருமலைக்கு வந்து செல்கிறது. இதன் மூலும் தினசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

இந்நிலையில் திருமலையில் உள்ள காற்று மாசு கண்காணிப்பதற்காக மாநில மாசு கட்டுப்பாட்டு துறை சார்பில் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

ஐதராபாத், டெல்லி, விஜயவாடா போன்ற பெருநகரங்களில் 60 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்த நிலையில் திருமலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, உடனடியாக தேவஸ்தான நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

இல்லாவிட்டால் காற்றில் கலக்கக்கூடிய நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயுவால் திருமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘திருமலையில் டீசல் வாகனங்களை குறைத்து பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்தும் விதமாக இலவச பேருந்துகள் அனைத்தும் பேட்டரி வாகனங்களாக மாற்றப்படும்’ என்றார்.



தலைமுடி 6 கோடிக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். அவை 6 ரகமாக தரம் பிரிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. அதன்படி திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் துறை அலுவலகத்தில் நேற்று தலைமுடி ஏலம் விடப்பட்டது.

இதில் 76 ஆயிரத்து 500 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ₹6. 01 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

.

மூலக்கதை