11 வயது சிறுமியை டார்ச்சர் செய்த விவகாரம் : பெண் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பியிடம் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
11 வயது சிறுமியை டார்ச்சர் செய்த விவகாரம் : பெண் இன்ஸ்பெக்டர், டிஎஸ்பியிடம் விசாரணை

சோழவந்தான் : பெண் இன்ஸ்பெக்டரின் வீட்டில் 11 வயது சிறுமியை வேலைக்கு வைத்து கொடுமைப்படுத்தியதாக, அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கணவரான டிஎஸ்பியிடமும் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே எம். புதுப்பட்டியை சேர்ந்தவர் தெய்வராணி(70). கணவர் இறந்து விட்டார்.

இவரது மகள் சண்முகலெட்சுமி. தேனி அல்லி நகரத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

சண்முகலெட்சுமியின் கணவர் பரமசாமி திருப்பூர் மாவட்டம், அவினாசியில் டிஎஸ்பியாக உள்ளார். இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 11 வயது சிறுமி, தெய்வராணியின் வீட்டில் வேலைக்கு இருப்பதாகவும், அவரை கொடுமைபடுத்தி வருவதாகவும் சைல்டு லைன் அமைப்பினருக்கு புகார் வந்தது.

மதுரை சைல்டு லைன் உறுப்பினர் மாரீஸ்வரி, இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து காடுபட்டி போலீசார் தெய்வராணி வீட்டுக்குச் சென்று சிறுமியை மீட்டு மதுரை மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், 11 வயது சிறுமியை தெய்வராணி குடும்பத்தினர், உரிய முறையின்றி தத்து எடுத்து தங்கள் வீட்டு வேலைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

மேலும் இந்த சிறுமியிடம் வேலை வாங்கியதுடன் தாக்கியதாகவும் தெரியவந்தது. இதன்பேரில் காடுபட்டி போலீசார், சிறுமியை கொடுமைப்படுத்தியது, காயம் ஏற்படும் வகையில் தாக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தெய்வராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சிறுமியை தத்து எடுத்தனரா என்பது குறித்தும் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி, கணவர் டிஎஸ்பி பரமசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


.

மூலக்கதை