இன்று பர்மிங்ஹாமில் வங்கதேச அணியுடன் மோதல்: ஸ்பின் பவுலர்களின் சொதப்பலால் 3 வேகப்பந்து வீரர்களுக்கு வாய்ப்பு....இங்கிலாந்திடம் கற்ற பாடத்தால் இந்தியா அதிரடி முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று பர்மிங்ஹாமில் வங்கதேச அணியுடன் மோதல்: ஸ்பின் பவுலர்களின் சொதப்பலால் 3 வேகப்பந்து வீரர்களுக்கு வாய்ப்பு....இங்கிலாந்திடம் கற்ற பாடத்தால் இந்தியா அதிரடி முடிவு

பர்மிங்ஹாம்: உலக கோப்பை போட்டியில் 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளை பெற்று, தோல்வியே அடையாத அணியாக இருந்த இந்தியா அணி நேற்று முன்தினம் பர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியாவுக்கு புள்ளிகள் பட்டியலில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், வங்கதேசம் (இன்று மாலை 3 மணி), இலங்கையுடன் (6ம் தேதி) நடைபெறவுள்ள 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெற முடியும்.


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சு சொல்லும்படியாக இல்லை. எதிரணிக்கு அதிக ரன்களை குல்தீப், சஹல் வீரர்கள் வாரி வழங்கி சாதனை படைத்தனர்.

ஸ்கோரை சேஸ் செய்வதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அலட்சியம், மெத்தனப் போக்கு ஆகியனவே தோல்விக்கு வழிவகுத்தது.

அதுவும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 5 ஓவர்களில் வெறும் 39 ரன்களையே தோனி - ஜாதவ் இணை சேர்த்தது கடும் கண்டனத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

அதுவும் தோனி 31 பந்துகளில் 42 ரன்களையும், கேதார் 13 பந்துகளில் 12 ரன்களையும் எடுத்தது, பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ‘மேட்ச் பிக்ஸிங்’ நடந்துள்ளதா? என்று கூற இணையதளவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

வங்கதேச வீரர்கள் தமிம் இக்பால், ஷகிப், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், மமுத்துல்லா ஆகியோர் சுழற்பந்து வீச்சை எளிதாக விளாசுவர். ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (476 ரன்கள், 10 விக்கெட்டுகள்) அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணிக்கு முந்தைய ஆட்டங்களில் வெற்றியை தேடித் தந்துள்ளார்.

கேப்டன் மஷ்ரப் மோர்டஸாவின் மோசமான ஆட்டமும் வங்கதேச அணிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்திய அணியில் புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி உள்ளிட்ட 3 வேகப்பந்து வீச்சாளர்கள் முதன்முறையாக இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம்.



இங்கிலாந்து அணியுடன் கற்றப் பாடத்தால் இந்திய அணியில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வங்கதேச அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும்கூட பந்துவீச்சு அவ்வளவாக வலிமையாக இல்லை.

இதனால் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதலில் பேட்டிங்கை இந்திய கேப்டன் கோஹ்லி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. நிலைமை இப்படி இருக்கையில், அரையிறுதிக்குள் நுழையும் 4 அணி பட்டியலில் வங்கதேச அணி அடுத்த 2 ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

மேலும் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளின் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அரையிறுதிக்கு வங்கதேசம் தேறுமா தேராதா என்பதை தீர்மானிக்க முடியும்.

வீரர்கள் உத்தேச பட்டியல்: இந்திய அணி 7 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. வங்காளதேச அணி 3 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 7 புள்ளிகள் பெற்றுள்ளது.

எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் வங்காளதேச அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும். இன்றைய போட்டியில் வங்கதேசம் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விடும்.



இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியலில், இந்திய அணி வீரர்கள்: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, டோனி, கேதர் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவீந்திர ஜடேஜா, பும்ரா.

வங்கதேசம் அணி வீரர்கள்: லிட்டான் தாஸ், தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்கார், மக்முதுல்லா, மொசாடெக் ஹூசைன், முகமது சைபுதீன், மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), முஸ்தாபிஜூர் ரகுமான்.

.

மூலக்கதை