உ.பி இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி

தினமலர்  தினமலர்
உ.பி இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி

லக்னோ : உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி முறிந்துள்ள நிலையில், அங்கு விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை இடைத்தேர்தலில், நான்கு முனை போட்டி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி - காங்கிரஸ் இடையே கூட்டணி உருவானது. பின், 2019 லோக்சபா தேர்தலின் போது, மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் உடன், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கூட்டணி வைத்தது. இந்த கூட்டணியில், ராஷ்ட்ரீய லோக் தளமும் இடம்பெற்றது. மொத்தமுள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், பகுஜன் சமாஜ், 38; சமாஜ்வாதி, 37; ராஷ்ட்ரீய லோக் தளம், மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில், பா.ஜ., 62 இடங்களிலும்; பகுஜன் சமாஜ், 10 இடங்களிலும்; சமாஜ்வாதி, ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன.அப்னா தளம், இரண்டு இடங்களிலும்; காங்., ஒரு இடத்திலும் வென்றன. இதையடுத்து, சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இடையிலான கூட்டணி, முடிவுக்கு வந்தது.இந்நிலையில், உ.பி.,யைச் சேர்ந்த, 11 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,க்களாக தேர்வு பெற்றனர். இதையடுத்து, இவர்கள் தங்கள், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.ஹமிர்புர் சட்டசபை தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., அசோக் குமார் சிங், கொலை வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, உ.பி.,யில், 12 சட்டசபை தொகுதிகள், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இந்த, 12 தொகுதிகளுக்கும், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த இடைத்தேர்தலில், பா.ஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்., இடையே, நான்கு முனை போட்டி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இனி வரவிருக்கும் தேர்தல்களில், பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும்' என, அக்கட்சி தலைவர் மாயாவதி, சமீபத்தில் தெரிவித்தார்.


'மும்முனையோ, நான்கு முனையோ, இந்த இடைத்தேர்தல், சட்டசபையில் எங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும்' என, பா.ஜ.,வின் செய்தி ஒருங்கிணைப்பாளர், ராகேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.'இந்த இடைத்தேர்தல், எதிர்பாராத முடிவுகளை தரும்' என, காங்., நம்பிக்கை தெரிவித்துள்ளது. தேர்தல் பணிகளை பார்வையிட, இரண்டு நபர் கமிட்டியையும் அக்கட்சித் தலைமை உருவாக்கி உள்ளது.

மூலக்கதை