லாராவுக்கு நெஞ்சு வலி! *மும்பை மருத்துவமனையில் சிகிச்சை | ஜூன் 25, 2019

தினமலர்  தினமலர்
லாராவுக்கு நெஞ்சு வலி! *மும்பை மருத்துவமனையில் சிகிச்சை | ஜூன் 25, 2019

மும்பை: விண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விண்டீஸ் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரையன் லாரா 50. டெஸ்டில் 11,953 ரன்கள், ஒருநாள் அரங்கில் 10,405 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆன்டிகுவா டெஸ்டில், ஒரு இன்னிங்சில் 400 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்தவர். முதல் தர போட்டியில் 501 ரன் (1994) எடுத்து சாதித்தார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த இவர், 2007ல் ஓய்வு பெற்றார். ஐ.பி.எல்., தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டார். கடந்த மே 2ம் தேதி தனது 50வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார்.

உலக கோப்பை தொடருக்காக மும்பை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஸ்டுடியோவில் தங்கி வர்ணனை செய்து வந்தார். இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதலின் போது, பாதியில் கிளம்பிய லாரா, நாளை விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வர்ணனை பணிக்கு வர இருந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக பரேல் பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இங்கு இவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

இரு ஆண்டுக்கு முன் லாராவுக்கு இருதய பிரச்னை ஏற்பட ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நெஞ்சு வலிப்பதாக உணர்ந்துள்ளார். தற்போது நலமாக உள்ளார். இன்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட உள்ளார். 

 

‘நலமாக உள்ளேன்’

விண்டீஸ் கிரிக்கெட் போர்டின் அதிகாரப்பூர்வ ‘டுவிட்டரில்’ லாராவின் ‘ஆடியோ’ வெளியானது. அதில் லாரா,‘ நான் நன்றாக உள்ளேன். விரைவாக மீண்டு வருகிறேன். இன்று எனது ஒட்டல் அறைக்கு திரும்புவேன்,’ என, தெரிவித்துள்ளார். 

மூலக்கதை