இந்தியாவை வெல்ல முடியுமா: என்ன சொல்கிறார் சாகிப் | ஜூன் 25, 2019

தினமலர்  தினமலர்
இந்தியாவை வெல்ல முடியுமா: என்ன சொல்கிறார் சாகிப் | ஜூன் 25, 2019

சவுத்தாம்ப்டன்: ‘‘பலம் வாய்ந்த இந்திய அணியை வெல்வது எளிதானது இல்லை. அதே நேரம், இவர்களை வீழ்த்தக்கூடிய வலிமை எங்கள் அணிக்கு உள்ளது,’’ என, வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் வங்கதேச அணி அசத்துகிறது. பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, விண்டீஸ் அணிகளை வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக ‘ஆல் ரவுண்டர்’ சாகிப் திகழ்கிறார். இதுவரை 6 போட்டியில் இரண்டு சதம் உட்பட 476 ரன்கள், 10 விக்கெட் எடுத்துள்ளார். வங்கதேசம்– இந்தியா அணிகள் மோதும் போட்டி ஜூலை 2ல் (பர்மிங்காம்) நடக்கவுள்ளது.

இது குறித்து சாகிப் கூறுகையில்,‘‘ இந்திய அணி பலம் வாய்ந்தது. உலகத்தரமான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிரான போட்டியில் வெல்வது எளிதானது இல்லை. அதே நேரம், அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கலாம். இந்திய அணியை வீழ்த்தக்கூடிய வலிமை எங்கள் அணிக்கு உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்தியா (ஜூலை 2), பாகிஸ்தான் (ஜூலை 5) அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெல்ல வேண்டும். கணக்குப்படி பார்த்தால், இந்த இலக்கு கடினமானது. ஆனால், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். இதில் நிச்சயமாக சாதிப்போம் என நம்புகிறேன்,’’ என்றார்.

எடை குறைத்த சாகிப்

இந்திய அணிக்காக (1996–2001) விளையாடிய சுனில் ஜோஷி, தற்போது வங்கதேச அணி சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். இவர் கூறுகையில்,‘‘ உலக கோப்பையில் சாகிப் அபாரமாக செயல்படுகிறார். சமீபத்தில், இவர் உடல் எடையில் 7 கி.கி., குறைத்துள்ளார். இதனால், ரன் எடுக்க வேகமாக ஓடுகிறார். வேட்கையுடன் விளையாடி வருகிறார். ஒரு ஜாம்பவான் போல திகழ்கிறார்,’’ என்றார்.

 

 

 

மூலக்கதை