பயிற்சியில் புவனேஷ்வர் குமார் * ஷமிக்கு இடம் கிடைக்குமா | ஜூன் 25, 2019

தினமலர்  தினமலர்
பயிற்சியில் புவனேஷ்வர் குமார் * ஷமிக்கு இடம் கிடைக்குமா | ஜூன் 25, 2019

மான்செஸ்டர்: காயத்தில் சிக்கிய புவனேஷ்வர் குமார் நேற்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் நாளை விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு இடம் கிடைக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்திய அணி தனது முதல் 5 போட்டியில் 4 வெற்றியுடன் (1 ரத்து) 9 புள்ளிகள் பெற்றுள்ளது. அதேநேரம் துவக்க வீரர் ஷிகர் தவான் காயத்தால் (பெருவிரல் எலும்பு முறிவு) விலகினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், தொடையின் பின் பகுதி காயத்தால் பாதியில் வெளியேறினார். அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி, ‘ஹாட்ரிக்’ விக்கெட் உட்பட 4 விக்கெட் வீழ்த்தினார். தவிர, இளம் வீரர் நவ்தீப் சைனி, இங்கிலாந்து கிளம்பிச் சென்றார்.

இதனால் நாளை விண்டீசிற்கு எதிரான போட்டியிலும் புவனேஷ்வர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று உள்ளரங்கில் புவனேஷ்னர் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார். இது இந்திய அணிக்கு நல்ல விஷயம் தான்.

எனினும், இந்திய அணியில் தலா இரண்டு ‘வேகங்கள்’, ‘சுழல்’ மற்றும் ‘ஆல் ரவுண்டர்கள்’ மட்டும் தான் இடம் பெறுகின்றனர். மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படுவது இல்லை. ஒருவேளை புவனேஷ்வர் அணிக்கு திரும்பினால், ஷமிக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு கைகொடுத்த ஷமிக்கு இது சோகம் தான்.

மூலக்கதை