நியூசி.,யிடம் தாக்குப்பிடிக்குமா பாக்., | ஜூன் 25, 2019

தினமலர்  தினமலர்
நியூசி.,யிடம் தாக்குப்பிடிக்குமா பாக்., | ஜூன் 25, 2019

பர்மிங்காம்: உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இதில் கட்டாய வெற்றியை நோக்கி பாகிஸ்தான் களம் காண்கிறது.

இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று பர்மிங்காமில் நடக்கவுள்ள லீக் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் நியூசிலாந்து, இந்திய அணிகள் மட்டுமே வலம் வருகின்றன. துவக்க ஜோடியான கப்டில் (5 போட்டி, 133 ரன்), முன்ரோவின் (113) செயல்பாடு பெரிதாக இல்லை. மொத்த அணியையும் கேப்டன் வில்லியம்சன் தோளில் சுமக்கிறார். இரண்டு சதம், ஒரு அரை சதம் உட்பட 373 ரன் குவித்துள்ளார். ‘சீனியர்’ வீரர் ராஸ் டெய்லர் கைகொடுத்தாலும், டாம் லதாம் ஏமாற்றுகிறார். நீஷம், கிராண்ட்ஹோம் என கடைசி வரை வெற்றிக்கு போராட வீரர்கள் உள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் பவுல்ட், பெர்குசன் இடையே ஆரோக்யமான போட்டி நிலவுகிறது. சான்ட்னரின் ‘சுழல்’ பணி (5 போட்டி, 3 விக்.,) சிறப்பாக இல்லை.

தடுமாறும் பாக்.,

பாகிஸ்தான் அணி தடுமாறினாலும், தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. மொத்தமாக ஆறு போட்டியில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள மூன்று போட்டியிலும் வென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அணியின் பலவீனமே, சீரான ஆட்டம் இல்லாததுதான். இமாம், பகார் ஜமான் நம்பிக்கை தருகின்றனர். இரண்டு அரை சதம் அடித்துள்ள பாபர் ஆஸம், ரன் குவிக்கிறார். முகமது ஹபீஸ், சோயப் மாலிக் ‘சீனியர்’ என்ற பொறுப்புடன் விளையாடுவது இல்லை. கேப்டன் சர்பராஸ் தேவைக்கேற்ப செயல்படுவதில் கோட்டைவிடுகிறார்.

இத்தொடரில் மிகுந்த சந்தேகத்திற்கு இடையே இடம்பிடித்தார் முகமது ஆமிர். ‘வேகத்தில்’ மிரட்டிய இவர் 5 போட்டியில் 15 விக்கெட் வீழ்த்தினார். இவருக்கு ஒத்துழைப்பு தர யாரும் இல்லாதது பின்னடைவு.

 

 

 

 

 

 

 

மூலக்கதை