புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக செலவு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவு

தினகரன்  தினகரன்
புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக செலவு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்கள் அலுவலக தேவைக்கான பொருட்களை துறை சார்ந்த அரசு பொது நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள்  ஆகியவற்றில் வாங்கி வருகின்றனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி இந்திய தகவல் அறியும்  உரிமை சட்டம் மூலமாக கேள்விகளை எழுப்பியிருந்தார். குறிப்பிட்ட நிறுவனங்கள் தவிர்த்து, பிற நிறுவனங்கள் ஏதும் மேல்முறையீட்டு மனு  செய்தும்கூட தகவல் தர மறுத்துவிட்டனர். இருப்பினும் சில நிறுவனம் கொடுத்த தகவலின்படி, வருவாய்த்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு, பிப்டிக்  நிறுவனத்தில் இருந்து ஸ்டேஷனரி பொருட்கள், இருக்கைகள், எலக்ட்ரானிக் ஸ்டவ், லேடர், வேக்யூம் கிளீனர் என ரூ. 3 லட்சத்து 16 ஆயிரத்து 151  பொருட்கள் வாங்கியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.சமூக நல அமைச்சர் கந்தசாமி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு தேனீர் உபசரிப்பு செய்ததற்கு ஏப்ரல் 2018ம் ம் ஆண்டு ஏப்ரல்  முதல் ஜூலை வரை நான்கு மாதங்களுக்கு பாட்கே நிறுவனம் மூலமாக ரூ.15 ஆயிரத்து 980 செலவு செய்துள்ளனர். தகவல் தராத நிறுவனங்களிலும்  இதுபோன்ற செலவின செயல்கள் நடைபெறுகிறது என தெரியவருகிறது. அமைச்சர்களின் அலுவலகத்துக்கு, இதுபோன்ற பொருட்களை அமைச்சரவை  அலுவலகமே வழங்கி வரும் நிலையில், அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக வாங்க வேண்டிய அவசியம் என்ன? இதனால் சம்மந்தப்பட்ட  நிறுவனங்களுக்கு செலவினங்கள் ஏற்படுகிறது.நீண்டகாலமாக அமைச்சர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் அனைத்து அரசு நிறுவனங்களும்,  ஊழியர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு நஷ்டத்தில் இயங்கி வருகிறது.எனவே அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு இதுபோன்று பொதுத்துறை நிறுவனங்கள் செலவு செய்யக்கூடாது. இவ்விஷயத்தில் முதல்வர் நாராயணசாமி  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த மனுவை கவர்னர், முதல்வர், தலைமை செயலருக்கு அவர் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், யார் சட்ட விதிகளை  மீறினாலும் அவர்கள் அதற்கான பதிலை கூற பொறுப்புடையவர்களே. கிடைத்த தகவல்களை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. சட்ட விதிகளை மீறி உதவி புரிந்த அரசு அதிகாரிகளும் இதற்கு பதில் கூறியாக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள்  அலுவலகத்துக்கு தேவையான பொருட்களை வாங்க அரசு சார்பு நிறுவனங்களில் இருந்து நிதிபெற்றிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்  தெரியவந்துள்ள நிலையில் கவர்னர் கிரண்பேடியின் இத்தகைய நடவடிக்கை புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை