'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை

தினமலர்  தினமலர்
இந்தியாவுடனான நம் உறவு மோசம்: பிரிட்டன் பார்லி., குழு வேதனை

லண்டன்: 'இந்தியாவுடனான நம் உறவு மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின் தங்கியுள்ளது. வெளியுறவு கொள்கை தொடர்பான விஷயங்களை மறு ஆய்வு செய்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என பிரிட்டன் பார்லிமென்ட் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பார்லிமென்ட் தேர்வுக் குழு இந்தியாவுடனான வர்த்தக மற்றும் அரசியல் உறவு தொடர்பான அறிக்கையை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்துள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவுடன் நம் நாடு வர்த்தக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக இந்தியாவுடனான நம் உறவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1998 - 99ல் இந்தியாவுடன் அதிகமாக வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் நம் நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போது 17வது இடத்துக்கு பின் தங்கி விட்டோம். அதேநேரத்தில் மற்ற நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைத்துள்ளன. 'பிரக்சிட்' விவகாரத்துக்கு பின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட குளறுபடி இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இந்திய சுற்றுலா பயணியர், மாணவர்கள், தொழில் நிபுணர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கான 'விசா' அளிப்பது மற்றும் குடியேற்ற கொள்கையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; இதை தளர்த்த வேண்டும்.


இந்தியர்களுக்கு 'விசா' அளிப்பது மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான விஷயங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்தியர்கள் எளிதாக பிரிட்டன் வந்து செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை