‘சூப்பர்மேன்’ சாகிப் சாகசம்! வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019

தினமலர்  தினமலர்
‘சூப்பர்மேன்’ சாகிப் சாகசம்! வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019

சவுத்தாம்ப்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘ஆல் ரவுண்டராக’ அசத்திய சாகிப் அல் ஹசன் 51 ரன்கள் மற்றும் 5 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு கைகொடுத்தார். 

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நேற்று நடந்த லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.

மழை காரணமாக 10 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. தனது 100வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதீன் பீல்டிங் தேர்வு செய்தார்.

முஷ்பிகுர் அபாரம்

வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் (10), தமிம் இக்பால் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. தமிம் இக்பால் (36) ஏமாற்ற, சாகிப் அல் ஹசன் 51 ரன் எடுத்தார். சவுமியா சர்கார் (3), மகமதுல்லா (27) சொதப்பினர்.

முஷ்பிகுர் 83 ரன்னுக்கு அவுட்டானார். கடைசி பந்தில் மொசாதெக் (35) போல்டானார். வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முஜீப் அர் ரஹ்மான் 3, குல்பதீன் 2 விக்கெட் சாய்த்தனர்.

சாகிப் ‘சுழல்’

ஆப்கானிஸ்தான் அணிக்கு குல்பதீன், ரஹ்மத் ஷா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. சுழலில் மிரட்டினார் சாகிப் அல் ஹசன். இவரிடம், ரஹ்மத் ஷா (24), குல்பதீன் (47), முகமது நபி (0), ஜட்ரன் (23) என வரிசையாக சரண் அடைந்தனர். ரஷித் கான் (2) கைவிட்டார். கடைசியில் முஜீப் போல்டாக, ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் 200 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. ஷென்வாரி (49) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேச அணியின் சாகிப் அல் ஹசன் 5 விக்கெட் வீழ்த்தினார். 

 

யுவராஜுக்கு அடுத்து...

உலக கோப்பை அரங்கில் ஒரு போட்டியில் 50 ரன்னுக்கும் மேல் எடுத்து, 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது ‘ஆல் ரவுண்டர்’ ஆனார் சாகிப் (51 ரன், 5 விக்.,). 2011 உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங் (50 ரன், 5 விக்.,) இதுபோல சாதித்தார்.

* இந்தியாவின் கபில் தேவ் (1983), யுவராஜ் சிங்கிற்கு (2011) அடுத்து ஒரு உலக கோப்பை தொடரில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் ஆனார் சாகிப்.

* சாகிப் அல் ஹசன் நேற்று 35 ரன் எடுத்த போது, உலக கோப்பை போட்டிகளில் 1000 ரன்கள், 28 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் ஆனார். சர்வதேச அளவில் இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு அடுத்து உலக கோப்பை தொடரில் 1000 ரன்கள், 25 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது ‘ஆல் ரவுண்டர்’ ஆனார் சாகிப். 

* உலக கோப்பை தொடரில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய முதல் வங்கதேச பவுலர் ஆனார் சாகிப் அல் ஹசன் (29 ரன், 5 விக்.,). இதற்கு முன் சபியுல் இஸ்லாம் (2011ல் 21/4 விக்.,) இருந்தார்.

* உலக கோப்பை தொடரில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய 6வது சுழற்பந்து வீச்சாளர் ஆனார் சாகிப். முதல் இடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (2011, 16 ரன்/5 விக்.,) உள்ளார்.

* ஒருநாள் அரங்கில் சாகிப்பின் சிறந்த பவுலிங்காக இது அமைந்தது.

மூலக்கதை