இங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணியிடம் இருந்து பாடம்: காலிஸ் அறிவுரை | ஜூன் 24, 2019

லண்டன்: ‘‘சரிவிலிருந்து எப்படி மீள வேண்டும் என்பதை, இங்கிலாந்து அணியிடம் இருந்து தென் ஆப்ரிக்க வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்,’’ என, முன்னாள் வீரர் காலிஸ் தெரிவித்துள்ளார்.

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி (259/9, 50 ஓவர்), 49 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் (308/7, 50 ஓவர்) வீழ்ந்தது. இதுவரை விளையாடிய 7 போட்டியில், ஒரு வெற்றி, 5 தோல்வியை பெற்ற தென் ஆப்ரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து முன்னாள் தென் ஆப்ரிக்க ‘ஆல்–ரவுண்டர்’ காலிஸ் கூறியது: உலக கோப்பை அரையிறுதிக்கு தென் ஆப்ரிக்க அணி முன்னேற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இம்முறை தென் ஆப்ரிக்க வீரர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. கடந்த 2015ல் நடந்த உலக கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றோடு வெளியேறியது. பின் எழுச்சி கண்ட இங்கிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘நம்பர்–1’ அணியாக வலம் வருகிறது. இம்முறை உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்துக்கும் உள்ளது. பயமின்றி விளையாடும் இவர்கள், போட்டியில் செய்த தவறுகளை உடனடியாக திருத்திக் கொள்கின்றனர். இவர்களிடம் இருந்து தென் ஆப்ரிக்க அணியினர் பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

தென் ஆப்ரிக்க அணியில் ரபாடா, லுங்கிடி, பெலுக்வாயோ, மார்க்ரம் என, திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இவர்கள், சிறந்த ‘லெவன்’ அணியை விரைவில் உருவாக்கும் பட்சத்தில் மிகப் பெரிய தொடர்களில் சாதிக்கலாம்.

இவ்வாறு காலிஸ் கூறினார்.

 

மூலக்கதை