தற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019

தினமலர்  தினமலர்
தற்கொலை செய்ய விரும்பினேன் * பாக்., பயிற்சியாளர் ‘ஷாக்’ | ஜூன் 24, 2019

 லார்ட்ஸ்: ‘‘இந்தியாவுக்கு எதிரான தோல்வியால் ஏற்பட்ட விமர்சனங்களால் தற்கொலை செய்து விடலாம் என விரும்பினேன்,’’ என மிக்கி ஆர்தர் தெரிவித்தார். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றது. இதனால் பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. கடந்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை பாகிஸ்தான் வீழ்த்தியதால், ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். 

இதுகுறித்து பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியது:

இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததும் எல்லோரும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கினர். வீரர்களின் குடும்பத்தினரையும் இந்த பிரச்னையில் இழுத்து விட்டனர். உண்மையை சொல்வதென்றால் கடந்த வாரம் எங்களுக்கு மிக கடினமாக இருந்தது. மீடியா விமர்சனம், ரசிகர்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த 16ம் தேதி தற்கொலை செய்து கொள்ள விரும்பினேன். பிறகு வீரர்களிடம்,‘ ஒரு போட்டியில் அசத்தினால், இதில் இருந்து மீண்டு விடலாம்,’ என்றேன். தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு விட்டனர்.

இவ்வாறு மிக்கி ஆர்தர் கூறினார்.

அப்போ எப்படி

கடந்த 2007, மார்ச் 17ல் உலக கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைய, தொடரில் இருந்து வெளியேற நேரிட்டது. மறுநாள் (மார்ச் 18) பாகிஸ்தான் பயிற்சியாளராக இருந்த பாப் உல்மர், மர்மமான முறையில் தனது ஓட்டல் அறையில் மரணம் அடைந்தார். இவரது மரணம் பெரும் சந்தேகத்தை கிளப்பியது. கடைசியில் இயற்கையானது என முடிவுக்கு வந்தனர்.

மூலக்கதை