பதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா

தினகரன்  தினகரன்
பதவிக்காலம் முடிய 6 மாதமே உள்ள நிலையில் திடீரென ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜினாமா

புதுடெல்லி: பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக துணை ஆளுநர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது. பொதுத் துறை வங்கிகளில் கடன் வழங்கியதில் நடந்த ஊழல்கள் மற்றும் வாராக்கடன் சுமையால் தவிக்கும் வங்கிகளுக்குக் கடன் மறுப்பு, வங்கிக்கான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசின் பரிந்துரையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து நிராகரித்து வந்தது. இதனால், தனியார் நிதி நிறுவனங்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் மூலம் பெரிய அளவில் கடன் கிடைப்பது குறைந்துபோனது. அந்த நிறுவனங்கள் பணப்புழக்கமின்றி தவித்து வருகின்றன. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசிடையே மோதல் வெடித்தது. கடந்த 2018 செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்ற நாச்சிகெட் மார் என்பவர், மத்திய அரசின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் எதிரொலியாக, பதவிக்காலம் முடிவதற்கு 2 ஆண்டுக்கு முன்னதாகவே, குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசை வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார். “ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை. இதற்கான விளைவுகள் விரைவிலோ சற்று தாமதமாகவோ தெரியவரும்; ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்’ என்று விமர்சித்தார். விரால் ஆச்சாரியாவின் இந்த கருத்துக்கு ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தன்னாட்சி உரிமை கொண்டதாகச் சொல்லப்படும் ரிசர்வ் வங்கியின் மீது தனது பிடியை இறுக்குவதற்காக, மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 7வது பிரிவைப் பயன்படுத்தியது. அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதில், பொதுத் துறை வங்கிகள் கடன் வழங்கிய விவகாரத்தை அவ்வங்கி அதிகாரிகள் கையாண்ட விதம், நிதிச் சந்தையில் நிலவும் இறுக்கமான பணப்புழக்கம் மற்றும் அதைப் போக்குவதற்கு அரசுத் தரப்பில் செய்த பரிந்துரைகள் உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைய 9 மாதங்களே இருந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் அவர் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலராகப் பணியாற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி அமலாக்கம் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றிய சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பின்னர் மத்திய அரசுடன் இணக்கமாக நடந்து கொள்வதற்கு முயன்றார். வாராக் கடன் பிரச்னையில் பொதுத்துறை வங்கிகளிடம் கெடுபிடி காட்டுவதை ரிசர்வ் வங்கி குறைத்துக்கொண்டது. மக்களவை தேர்தல் முடிந்து மீண்டும் பாஜ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அரசுடன் சுமூக போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்கு ஆபத்தில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறிவந்தன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது. பதவி காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் விரால் ராஜினாமா செய்ததற்கான காரணங்கள் தெரியவில்லை. ஆனால்  இவர், ஏற்கனவே மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கூறிவந்ததாலும், மீண்டும் பாஜ தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதாலும் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொருளாதார  பேராசிரியராக இருந்த விரால் வி.ஆச்சார்யா(42) ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக 2017 ஜனவரி 23ம் தேதி விரால் பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் கீழ் பணியாற்றும் நான்கு துணை ஆளுநர்களில் ஒருவராக ஆச்சார்யா இணைந்தார். தற்போது ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததால், மீண்டும் பேராசிரியர் பணிக்கு செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சகத்திலும் சிக்கல்லஞ்சம், ஊழல், பாலியல் புகார் காரணமாக மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய 12 உயர் அதிகாரிகளுக்கு, சில நாட்களுக்கு முன் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பப்பட்டனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 12 அதிகாரிகள் நீக்கம், தன்னாட்சி உரிமம் கொண்ட அமைப்பான ரிசர்வ் வங்கியின் ஆளுநர், துணை ஆளுநர் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகல் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

மூலக்கதை