'எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க!' சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு

தினமலர்  தினமலர்
எங்க ஊர்ல குடியிருந்து பாருங்க! சாய கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டு போச்சு

பல்லடம்:-கரைப்புதுார் ஊராட்சியில் குடியிருந்து பாருங்கள் என, சாயக்கழிவு நீர் பிரச்னைக்காக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிகாரிகளிடம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.பல்லடத்தை அடுத்த கரைப்புதுார் ஊராட்சியை சுற்றிலும், ஏராளமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் முறைகேடாக இயங்கும் சில சாய ஆலைகளின் அத்துமீறல்களால், குளம், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்டவை மாசடைவதுடன், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, கரைப்புதுார் கிராமத்திலுள்ள கிணறுகள் மாசடைந்து, நிலத்தடி நீர் பயன்படுத்துவதற்கு முடியாததாக மாறி வருகிறது. அது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை கண்டித்து, பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:கரைப்புதுார் ஊராட்சி வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறி வருகிறது. முறைகேடான சாய ஆலைகளின் தொடர்ச்சியான அத்துமீறல் காரணமாக, இப்பகுதியில், தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாயக்கழிவு நீர் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதால், மனிதர்கள் மட்டுமின்றி, கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. புகார் அளித்ததும், அதிகாரிகள், மாதிரி நீரை சேமித்துவிட்டு, பின் மாயமாகி விடுகின்றனர். இவ்வாறு, கடந்த 10 ஆண்டுக்கு மேலாக இப்பிரச்னை தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது,
கரைப்புதுார் கிராமத்தில், ஒரு மாதமாவது அதிகாரிகள் குடியிருப்பு பார்க்கட்டும். அப்போதுதான், சாய ஆலைகளின் அத்துமீறல்களால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், உதவி பொறியாளர் வனஜா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உங்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லையெனில், யார் உயர் அதிகாரியோ அவர்களை வர சொல்லுங்கள் என்றனர். அதை தொடர்ந்து, திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார்.நிலத்தடி நீர் சுத்தமாகும் வரை, கரைப்புதுார் பகுதி குடியிப்புகளுக்கு, சாய ஆலைகள் இணைந்து, எல் அண்ட் டி தண்ணீர் வழங்க வேண்டும். 'ஸ்லட்ஜ்' எனப்படும் சாய ஆலை திடக்கழிவுகள், ஆலை வளாகங்களில் புதைக்கப்பட்டுள்ளதை, ஆய்வு செய்து அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
சாய ஆலை உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். அதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தண்ணீரா? சர்பத்தா?கரைப்புதுார் கிராமத்தில், பழுப்பு, மஞ்சள, நீலம் என, நிலத்தடி நீர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் வருகிறது. தண்ணீருக்கும் நிறம் உண்டு என்பதை, சாய ஆலைகள் வெளிக்காட்டி உள்ளனர். ஆழ்துளை கிணறுகளில் வருவது தண்ணீரா அல்லது சர்பத்தா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு, தண்ணீர் நிறம் மாறி வருவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறினர்.

மூலக்கதை