அமெரிக்கா சொல்வது பொய்

தினமலர்  தினமலர்
அமெரிக்கா சொல்வது பொய்

தெஹ்ரான்:எங்கள் ராணுவத்தின் கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவி, 'சைபர் அட்டாக்' எனப்படும், இணைய தாக்குதல் நடத்தும் முயற்சிகளுக்கு இதுவரை, யாருக்கும் வெற்றி கிடைத்ததில்லை' என, மத்திய கிழக்கு நாடான, ஈரான் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான, ஈரானுடன் செய்திருந்த அணு ஒப்பந்தத்தை, அமெரிக்கா கடந்தாண்டு ரத்து செய்தது. மேலும், ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையையும் விதித்தது. அதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் கூறியதால், பதற்றம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், ஈரான் ராணுவத்தின் கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவி, அவற்றை, அமெரிக்கா செயலிழக்க செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.இதை, ஈரான் மறுத்துள்ளது. ஈரான் தொலைதொடர்பு துறை அமைச்சர் முகம்மது ஜாவேத் அஸரரி ஜரோமி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:கடந்த, 2010ல், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து, கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி, எங்களுடைய அணு திட்டங்களை சீர்குலைக்க முயன்றன. அதைத் தொடர்ந்து, இதுபோன்ற தாக்குதல்களை முறியடிக்கும் வசதியை, சொந்தமாக உருவாக்கியுள்ளோம்.கடந்த ஆண்டில் மட்டும், 3.30 கோடி முறை எங்களுடைய கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவ, பலர் முயன்றுள்ளனர். எங்களுடைய கட்டமைப்பு வலுவாக இருப்பதால், எவராலும் நுழைய முடியவில்லை.அதனால், எங்கள் ராணுவத்தின் கம்ப்யூட்டர்களுக்குள் ஊடுருவி, செயலிழக்கம் செய்ததாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை. அவ்வாறு, எந்த பாதிப்பும் எங்களுக்கு ஏற்படவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை