இங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து நாடாளுமன்ற குழு அறிக்கை வேகமாக வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த வேண்டும்

லண்டன்: ‘‘உலக அரங்கில் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு தகுந்தபடி, யுக்திகளை வகுத்து உறவை மேம்படுத்தும் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது’’ என இங்கிலாந்து நாடாளுமன்ற குழு விசாரணை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை முன்னிட்டு, இந்தியா - இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஜூலை மாதம் உருவாக்கியது. இந்த குழுவினர் கடந்த ஓராண்டாக பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர். இந்தியாவுடனான உறவை மேம்படுத்த, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், ‘இங்கிலாந்து - இந்தியா வாரம் 2019’ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கிலாந்து - இந்தியா உறவை மீண்டும் மேம்படுத்துவது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:* வளரும் இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து பின்தங்கியுள்ளது. பல வாய்ப்புகளை இங்கிலாந்து தவறவிட்டுள்ளது. * இந்தியாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்த சில நடவடிக்கைகளை இங்கிலாந்து எடுக்க வேண்டும். முக்கியமாக இங்கிலாந்துக்கு வரும் இந்தியர்களின் விசா நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். விசா விஷயத்தில் ஜனநாயகம் அற்ற நாடாக இருக்கும் சீனாவை விட, இங்கிலாந்தில் விதிமுறைகள் கடுமையாக இருப்பதாக இந்தியா உணர்கிறது. * இங்கிலாந்தின் குடியுரிமை கொள்கைகள் இந்திய மாணவர்களையும், சுற்றுலா பயணிகளையும் இழக்க வழிவகுத்துவிட்டது. இவர்களால் பொருளாதாரம் மட்டும் அல்ல இருதரப்பு உறவும் வலுவடையும். * இந்தியாவுடனான ஒட்டுமொத்த உறவை மேம்படுத்துவதில் வெளியுறவுத்துறை மற்றும் காமன்வெல்த் அலுவலகம் உறுதி செய்ய வேண்டும். * இந்தியாவுடனான உறவால் இருதரப்புக்கும் பயன் ஏற்படும். இந்தியாவுக்கு சரியான தகவல் தெரிவிக்கப்படாததால், இருதரப்பு உறவுகளின் பயன்கள் நிறைவேறவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்து தயாராகி கொண்டிருப்பதால், இந்தியாவுடனா உறவை மேம்படுத்த இது சரியான நேரம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை