எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

தினகரன்  தினகரன்
எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு கேட்ட பிரஜா வேதிகா கட்டிடத்தை இடிக்க வேண்டும்: முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

திருமலை: எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு தனக்கு வழங்க வேண்டும் என கேட்ட ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள பிரஜா வேதிகா கட்டிட இடத்தை இடிக்க  அதிகாரிகளுக்கு  முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது  குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் அவர் வாடகை எடுத்து தங்கியுள்ள வீட்டின் அருகே கிருஷ்ணா நதிக்கரை ஓரத்தில் பிரஜா வேதிகா என்னும் கட்டிடத்தை கட்டினார். இந்த கட்டிடத்தில் கலெக்டர்கள் மாநாடு, மக்கள் நலத் திட்ட உதவிகள் வழங்குவது,  பொதுமக்களிடம்  குறைகேட்கும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் தனது வீட்டின் அருகே உள்ள பிரஜா வேதிகா கட்டிடத்தை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தனக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலமாக தன்னை சந்திக்க வரக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களை பார்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் பிரஜா வேதிகாவில் நேற்று முதல்  கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது: கிருஷ்ணா நதிக்கரையையொட்டி நதி பாதுகாப்பு சட்டத்தை மீறியும்,  சுற்றுச்சூழல் மாசுபடுவதை கண்டுகொள்ளாமலும், பசுமை தீர்ப்பாயத்திற்கு எதிராக தற்போது நாம் கூட்டம் நடத்தக் கூடிய பிரஜா வேதிகா கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் கட்டிடம் இடிக்க கூடிய நிலையில் அரசே  தவறு செய்து, ஊழல் செய்து கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த கலெக்டர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் (இன்று) எஸ்பிக்கள் மாநாட்டுடன் இந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்க வேண்டும்.  இதேபோன்று மாநிலம் முழுவதும் முறைகேடாக சட்ட விதிகளுக்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டப்பட்டு இருந்தாலும் அவை அனைத்தையும் கலெக்டர்கள் முன்னிலையில் இடிக்க வேண்டும் என்றார்.அரசு பள்ளி, மருத்துவமனைகளில் கலெக்டர்கள் ஒருநாள் தங்க வேண்டும் மாநாட்டில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது:ஆந்திராவில் எப்போதும் இல்லாத வகையில் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக அனைவரும் செயல்பட வேண்டும். அரசு துறையில் பணிபுரியக்கூடிய ஊர்க்காவல் படையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், கான்ட்ராக்டர்கள் அனைவரிடமும் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக் கிழமையன்று குறைகளை கேட்க வேண்டும். மேலும் கலெக்டர்கள் வாரம் ஒருமுறை அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, பள்ளி விடுதிகளில் இரவு தூங்க வேண்டும். இதன் மூலம் அந்தந்த இடங்களில் என்னென்ன அடிப்படை வசதிகள் உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

மூலக்கதை