மும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி

தினகரன்  தினகரன்
மும்மொழி கொள்கையில் விருப்ப மொழி தேர்வு செய்ய அனுமதி

புதுடெல்லி: தேசிய வரைவு கல்வி கொள்கை திட்டமானது மும்மொழி கொள்கையில் விருப்ப மொழியை தேர்வு செய்வதற்கு முன்மொழிகிறது என மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் போக்ரியால் நிஷாங் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் போக்ரியால் நிஷாங் பேசியதாவது: பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னரே தேசிய வரைவு கல்வி கொள்கையானது இறுதி செய்யப்படும். முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய தேசிய வரைவு கொள்கை குறித்த அறிக்கையை மே 31ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்திடம் சமர்பித்தது. இதில் இந்தி அல்லாத மாநிலங்களிலும் இந்தி படிக்க வேண்டும் என்ற பரிந்துரையானது சர்ச்சையை ஏற்படுத்தியது என்றார். அப்போது ஏஐஎம்ஐஎம் உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி, “மும்மொழி கொள்கை என்ற திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் இந்தியை கட்டாய பாடமாக்க அரசு திட்டமிட்டுள்ளதா? மத்திய அமைச்சர் வேண்டுமென்றே அவையை தவறாக வழிநடத்துகிறார்” என்றார். திமுக எம்பிகளுடன் இணைந்து தேசிய கல்வி கொள்கை குறித்தும் மும்மொழி கொள்கை குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தினார்.  இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் போக்ரியால் நிஷாங், “அனைத்து தேசிய மொழிகளையும் வலுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்ைக மேற்கொண்டு வருகின்றது. இது தற்போது வரை வரைவு அறிக்கை மட்டுமே. மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிசெய்யும் அதே வேளையில் விருப்பமொழியை தேர்வு செய்துகொள்வதற்கான நெகிழ்வு தன்மையையும் வரைவு அறிக்கை முன்மொழிகிறது” என்றார்.

மூலக்கதை