கோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா

தினகரன்  தினகரன்
கோபா அமெரிக்கா கால்பந்து கால் இறுதியில் அர்ஜென்டினா

போர்டோ அலெக்ரே: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. பிரேசில் நாட்டின் போர்டோ அலெக்ரே நகரில் நடைபெற்ற பி பிரிவு லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா - கத்தார் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் மார்டினஸ் 4வது நிமிடத்திலும், ஆகுவரோ 82வது நிமிடத்திலும் கோல் போட்டனர். நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கோல் அடிக்கத் தவறினார். எனினும், நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடிய மெஸ்ஸிக்கு சக வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியுடன் பி பிரிவில் 4 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த அர்ஜென்டினா அணி (1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி) கால் இறுதிக்கு முன்னேறியது. கொலம்பியா அணி 3 போட்டியிலும் வென்று 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஏ பிரிவில் பிரேசில் (7), வெனிசுலா (5), பெரு (4) அணிகளும், சி பிரிவில் சிலி (6), உருகுவே (4) அணிகளும் கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன. பி பிரிவில் 3வது இடம் பிடித்த பராகுவே (2) அணியும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மூலக்கதை