உலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு

தினமலர்  தினமலர்
உலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு

நாட்டிங்காம்: வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் வார்னர் சதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 381 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. நாட்டிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப், ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட ஸ்டாய்னிஸ், ஜாம்பா, கூல்டர் நைல் வாய்ப்பு பெற்றனர். வங்கதேச அணியில் சைபுதின், மொசாதக்கிற்குப்பதில் சபிர் ரஹ்மான், ருபைல் ஹொசைன் இணைந்தனர்.


அபார துவக்கம்ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி அபார துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய பின்ச் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தபோது, பின்ச் (53) ஆட்டமிழந்தார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த வார்னர், ஒரு நாள் அரங்கில் 16வது சதம் அடித்தார். இது, நடப்பு உலக கோப்பை தொடரில் இவர் அடித்த இரண்டாவது சதம். வார்னர் 166 ரன்களில் அவுட்டானார். கவாஜா (89) அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் (32) ரன் அவுட்டானார். ஸ்மித் (1) ஏமாற்றினார்.

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மீண்டும் துவங்கிய போட்டியில் ஸ்டாய்னிஸ் விளாச, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. ஸ்டாய்னிஸ் (17), கேரி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை