அமெரிக்க விமானத்தை வீழ்த்தியது ஈரான்; டிரம்ப் எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
அமெரிக்க விமானத்தை வீழ்த்தியது ஈரான்; டிரம்ப் எச்சரிக்கை

டெஹ்ரான்: அமெரிக்காவின், ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் தெரிவித்துள்ளது; இதை, அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளது.


மேற்காசிய நாடான ஈரானுடன், அணு சக்தி ஒப்பந்தத்தை, கடந்த ஆண்டு, அமெரிக்கா முறித்துக் கொண்டது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே, மோதல் போக்கு நீடித்து வருகிறது.ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 'அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம்' என, ஈரான் பதிலடி தருகிறது. சமீபத்தில், ஓமன் வளைகுடாவில், எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 'இந்த தாக்குதலுக்கு, ஈரானே காரணம்' என, அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. ஆனால், ஈரான் இதை மறுத்தது.

இந்நிலையில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள, ஹோர்மஸ்கான் என்ற இடத்தில், வான்வெளியில் பறந்த, அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை, சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இது பற்றி, ஈரான் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமெரிக்க உளவு விமானம், அத்து மீறி ஈரான் வான்வெளியில் நுழைந்ததால், சுட்டுவீழ்த்தினோம்' என்றார். இதை, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' ஒப்புக் கொண்டுள்ளது.

இது பற்றி, பென்டகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'அமெரிக்க உளவு விமானம், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. 'ஆனால், ஈரான் வான்வெளியில், அமெரிக்க விமானம் நுழையவில்லை. சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது தான், ஈரான் சுட்டு வீழ்த்தி உள்ளது' என்றார்.


டிரம்ப் எச்சரிக்கை:


அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை எச்சரித்து, தனது டுவிட்டரில், 'ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது' என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை