அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்

தினகரன்  தினகரன்
அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்த இளைஞர்: தினந்தோறும் அபிஷேகம்

திருமலை: அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு தெலங்கானா இளைஞர் 6 அடி சிலை வைத்து தினந்தோறும் அபிஷேகம் செய்து வருவது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகின்  சர்வாதிகார நாடாக விளங்கி வருவது அமெரிக்கா. அந்நாட்டின்  அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்து வருகிறார். டிரம்ப் வித்தியாசமான முடிவுகளை எடுப்பதுடன் தனக்கென ஒரு புதிய சிந்தனையில் பணிகளை செய்து வருகிறார். டிரம்ப்க்கு எந்த அளவிற்கு எதிர்ப்பு உள்ளதோ அந்த அளவிற்கு அவருக்கு ஆதரவாளர்களும் உள்ளனர். இந்தியாவில் அவருக்கு தீவிர ஆதரவாளர்கள் உள்ளது ஆச்சரியமான விஷயம்தான். தெலங்கானா மாநிலம், ஜனகாம்மா மாவட்டத்தை சேர்ந்தவர் பூஸ்சா கிருஷ்ணா. இவர் தனது வீட்டின் முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் பூஜை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி டிரம்ப் பிறந்த நாளையொட்டி பால் அபிஷேகம் செய்து வழிபட்டார். இந்தியாவில் பல்வேறு தேசிய தலைவர்கள் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கிருஷ்ணா தினந்தோறும் பூஜை செய்து வருவது எதற்காக என்று தெரியாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து பூஸ்சா கிருஷ்ணா கூறுகையில், ‘‘எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர் டிரம்ப். அதனால் அவரை எனக்கு பிடிக்கிறது. இந்த சிலை அமைக்க ₹1.5 லட்சம் செலவு செய்தேன். தினமும் பால், புஷ்பாபிஷேகம் செய்கிறேன். டிரம்ப் தனது டிவிட்டரில் ஆதரவாளர்கள், ரசிகர்களுக்கு பதிலளித்து வருகிறார். அவரை நேரில் சந்திக்க எனக்கு விருப்பம் உள்ளது. என்றாவது ஒருநாள் நான் அவரை நேரில் சந்திப்பேன்’’ என்றார்.

மூலக்கதை