வில்லியம்சன் சதம்: நியூசி., 'திரில்' வெற்றி

தினமலர்  தினமலர்
வில்லியம்சன் சதம்: நியூசி., திரில் வெற்றி

பர்மிங்காம்: உலக கோப்பை லீக் போட்டியில் கேப்டன் வில்லியம்சன் சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.


'பேட்டிங்', 'பவுலிங்கில்' ஏமாற்றிய தென் ஆப்ரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. மழையால் போட்டி துவங்குவதில் தாமதமானது. பின், தலா 49 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.


தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (5) ஏமாற்றினார். கேப்டன் டுபிளசி (23) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஆம்லா (55), அரைசதம் கடந்தார். மார்க்ரம் (38), டேவிட் மில்லர் (36) பெரிய அளவில் சோபிக்கவில்லை. நிதானமாக ஆடிய வான் டெர் துசென், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். பெலுக்வாயோ 'டக்-அவுட்' ஆனார். தென் ஆப்ரிக்க அணி 49 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 241 ரன்கள் எடுத்தது. வான் டெர் துசென் (67), கிறிஸ் மோரிஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பெர்குசன், 3 விக்கெட் கைப்பற்றினார்.


வில்லியம்சன் நம்பிக்கை

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு கோலின் மன்ரோ (9) ஏமாற்றினார். மார்டின் கப்டில் (35), 'ஹிட் விக்கெட்' முறையில் 'பெவிலியன்' திரும்பினார். கிறிஸ் மோரிஸ் 'வேகத்தில்' ராஸ் டெய்லர் (1), டாம் லதாம் (1) வெளியேறினர். ஜேம்ஸ் நீஷம் (36) ஓரளவு கைகொடுத்தார். பெலுக்வாயோ, ரபாடா பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த கோலின் டி கிராண்ட்ஹோம், மோரிஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, 39 பந்தில் அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்த போது லுங்கிடி 'வேகத்தில்' கிராண்ட்ஹோம் (60) அவுட்டானார்.

நியூசிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன் தேவைப்பட்டது. பெலுக்வாயோ வீசிய 49வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த வில்லியம்சன், சதம் கடந்து வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நியூசிலாந்து அணி 48.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூலக்கதை