எம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்

தினகரன்  தினகரன்
எம்எச்17 பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து வழக்கு: விசாரணை அடுத்த ஆண்டு தொடக்கம்

நியூவேஜியன்: எம்எச் 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ரஷ்ய ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மீது நெதர்லாந்து நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணை தொடங்குகிறது. நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியா தலைநகர் கோலாம்பூருக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 17ம் ேததி மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்எச் 17 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. உக்ரைன் நாட்டின் மேலே நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியது.  இதில் அதில் பயணம் செய்த 298 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 196 ேபர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள், 38 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக நெதர்லாந்தை சேர்ந்த பாதுகாப்பு நிர்வாகமும், கூட்டு விசாரணைக்குழு விசாரணை நடத்தி கடந்த 2015ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பக் என்ற ஏவுகணையை ஏவி விமானம் தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கூட்டு விசாரணைக்குழு கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் தெரிவித்த தகவலில் எம்எச் 17 விமானம் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதை உறுதி செய்தது.  ஆனால் இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் அமைச்சர் நேற்று முன்தினம் இது தொடர்பாக பேட்டியளித்தபோது இந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மேலும் 3 பேருக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக விமான விபத்தில் இறந்த நெதர்லாந்தை சேர்ந்த உறவினர்கள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.3 ரஷ்யர்கள், ஒரு உக்ரைனியருக்கு தொடர்புநெதர்லாந்தை நாட்டை சேர்ந்த சர்வதேச புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று கூறியதாவது: எம்எச் 17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 ரஷ்யர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான தாக்குதலில் தொடர்புடையதாக ரஷ்யாவை சேர்ந்த இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி, ஓலேக் புலடோவ், மற்றும் உக்ரைனை சேர்ந்த லியோனிட் கர்கென்கோ ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டு இன்று அவர்களுக்கு கைது வாரன்ட் பிறப்பித்துள்ளோம். அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளோம்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யர்களும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவரும் மறுத்துள்ளனர்.

மூலக்கதை