மழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்

தினகரன்  தினகரன்
மழையில்லை, ஆறுகள் இல்லை ஆனாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை: நீர் மேலாண்மையில் கலக்கும் வளைகுடா நாடுகள்

துபாய்: இயற்கை வளம் நிறைந்த தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால், மிகப்பெரிய‌  ஆறுகளோ, தொடர் மழையோ இல்லாத, கடும் வெப்பமும் பாலைவனமும் சூழ்ந்த சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் குடிநீர் சீராக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நீர் மேலாண்மைதான். சவுதி அரேபியாவின் நீர் தேவையில் 50 சதவீதம் மேல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் நிறைவேற்றப்படுகிறது. 40 சதவீதம் நிலத்தடி நீரிலிருந்தும், 10 சதவீதம் மலைப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர்த்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் சவுதியில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. அரசாங்கம் பல்வேறு மாற்று திட்டங்களை செயல்படுத்தி தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் 42 சதவீதம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்கப் பெறுகிறது. இங்கு 70க்கும் மேற்பட்ட கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளன. நிலத்தடி நீர் முறையாக பயபடுத்தப்படுகிறது. குறிப்பாக துபாய் நகரத்தில் தனிமனித‌ தண்ணீர் பயன்பாடு சதவீதத்தில் அதிகமாக இருந்தாலும் தண்ணீர் விநியோகம் சீராக உள்ளது. மேலும், பசுமையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் மழையின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்த மழைநீரை அணைகளில் சேகரிப்பதும் நடைபெறுகிறது. சில காலம் முன் அன்டார்டிகாவில் இருந்து பனிகட்டிகள் மூலம் குடிநீர் பெறும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இயற்கையான நீரை  அதிகரிக்க தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.வளைகுடா நாடுகளில் நீர் மேலாண்மை முறையாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக நிலத்தடி நீர் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதியின்றி நீர் பயன்பாடு கிடையாது. நீர் விநியோகத்திற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது. மேலும் பெரும்பாலான பகுதிகளில்  கழிவுநீர் வெளியேற்றுவதற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளின் நகரங்களில் சாலையோரங்களில், பூத்து குலுங்கும் அழகிய மலர்களோடு பூங்காக்கள் அதிகமாக உள்ளன. இவற்றுக்கெல்லாம் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நீர் பாய்ச்சப்படுகிறது. இது போன்ற நடவடிக்கைகளால் நீர் வீணாவது தடுக்கப்படுவதுடன் தண்ணீரின் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு வழிகாட்டும் விதமாக‌ வளைகுடா நாடுகள் முன்னுதாரண மாக திகழ்கிறது என்றால் மிகையில்லை.

மூலக்கதை